/tamil-ie/media/media_files/uploads/2023/06/Sathya-Priya.jpg)
திருச்சி மாநகரில் அரிஸ்டோ பாலம் கடந்த மாதம் 29 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலம் மன்னார்புரம், திண்டுக்கல் சாலை, ஜங்சன், கிராப்பட்டி, மத்திய பேருந்து நிலையம் சென்னை மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த பாலத்தின் வழிகளில் வாகனங்கள் ஏறுவதற்கு அல்லது இறங்குவதற்கு என ஒரு வழி பாதையாக தான் இருக்கிறது. அந்த பாலத்தில் இரண்டு வழித்தடங்களில் மட்டும் இரு வழி பாதையாக மாற்ற ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்ய பிரியா அந்த பாலத்தை ஆய்வு செய்தார். மேலும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரு வழி பாதைக்கான சோதனை முன்னோட்டம் இன்று நடைபெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Trichy-9.jpg)
அதனையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா, “போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த பாலத்தின் இரண்டு வழித்தடங்களில் மட்டும் இருவழிப் பாதையாக மாற்றுவதற்கு ஆய்வு செய்து வருகிறோம்.
இன்னும் சில நாளில் இது இருவழிப்பாதையாக மாற்றப்படும். சிறிய ரக வாகனங்கள் மட்டும் இருவழிப் பாதையில் செல்ல அனுமதிக்கப்படும். திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் 1500 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அந்த கேமராக்கள் அனைத்தும் சரியாக இயங்குகிறதா என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தினம் தோறும் அதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் தொடர்புடைய 29 குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு திறக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தொடர்ந்து காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இது தவிர கஞ்சா எங்கிருந்து வருகிறது எப்படி விற்பனை செய்யப்படுகிறது என பல்வேறு கோணங்களில் விசாரித்து குறிப்பிட்ட இடங்களை அடையாளம் கண்டுள்ளோம்.
அந்த இடங்களில் தீவிர கண்காணிப்பானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதை பொருள் குறித்து தொடர்ச்சியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.
முன்னதாக போக்குவரத்து போலீஸார் பாலத்தின் மையப்பகுதியில் இருந்து வாகனங்களை கண்காணிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும், பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் நிற்ப்பதற்கென சிறு கூண்டு ஒன்றும் திறக்கப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.