திருச்சி அரிஸ்டோ ஜங்சன் மேம்பாலம் விரைவில் திறப்பு: திருநாவுக்கரசர் எம்.பி. பேச்சு
திருச்சியில் பொதுமக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு திருச்சி ஜங்சன் அரிஸ்டோ பகுதியில் புதிய ரவுண்டானா சுமார் ரூ.168 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.
திருச்சி மாநகரில் மிகவும் பழமையான, அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி (அரிஸ்டோ மேம்பாலம்) 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலைய பகுதி, ஜங்ஷன் ரயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து 2018-ம் ஆண்டு திறக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில், சென்னை-மதுரை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ரூ.90 கோடி நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ஒதுக்கியதுப்போக மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதில் ஒரு பகுதி ராணுவத்திற்கு சொந்தமான பகுதி என்பதால் அந்தப் பகுதியில் மட்டும் பாலம் கட்டும் பணி முடிவுக்கு வராமல் இருந்தது.
இதனைத்தொடர்ந்து திருச்சி எம்.பி.திருநாவுக்கரசர் நாடாளுமன்றத்தில் பேசியும், ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்ததன் வெளிப்பாடாக எஞ்சிய பணிகள் மூன்று கோடியே 53 லட்சம் மதிப்பில் முடிவடைந்தது.
முடிவடைந்த பாலத்தை எம்.பி.திருநாவுக்கரசு ஆய்வு மேற்கொண்டு மீதமுள்ள எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க துரிதப்படுத்தினார். இந்த ஆய்வின்போது காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாநகராட்சி உறுபினர் எல்.ரெக்ஸ், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் மற்றும் உதவி இயக்குனர் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வின் பின்னர் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. சுற்றுச்சுவர் மற்றும் மின்விளக்கு அமைக்கும் பணி விரைவில் முடிவடையும். அதன்பின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் திறப்பு விழா நடைபெறும். விரைவில் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil