திருச்சி ஆசிரமப் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு; முக்கிய நிர்வாகி போக்சோவில் கைது
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு சொந்தமான பள்ளியில் பாலியல் அத்துமீறல் தொடர்ந்து நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் புகார் தெரிவித்த நிலையில் பள்ளியின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisment
பெட்டவாய்த்தலை அருகே உள்ள திருப்பராய்துறை உயா்நிலைப் பள்ளியில் படிக்கும் 250 மாணவா்கள் ஆசிரமத்தில் தங்கி படித்து வருகின்றனர். ஸ்ரீராமகிருஷ்ண குடில் சார்பில் நடத்தப்படும் விடுதியில் உணவு, உடை மற்றும் இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்துள்ள சிறார்கள் தங்கி பயில்கின்றனா்.
இந்நிலையில் அங்குள்ள மாணவா்கள் சிலருக்கு விடுதிப் பணியாளா்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக வந்த புகாரின்பேரில், உரிய விசாரணை நடத்த ஆட்சியா் உத்தரவிட்டார்.
Advertisment
Advertisements
இதனைத் தொடர்ந்து, மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, குழந்தைகள் நல அலுவலர் ராகுல் காந்தி ஆகியோர் பெட்டவாய்த்தலை ஆசிரம பள்ளியில் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உண்மை என கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து பாலியல் சீண்டல் தொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ஜீயபுரம் போலீசார் பள்ளி ஊழியர்களான சிவகிரி, பார்த்திபன், ஏசுராஜ், தனசேகர் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில், அந்த பள்ளியின் முக்கிய நிர்வாகியான கருப்பையா என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் மாணவர்களிடம் கருப்பையாவும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெட்டவாய்த்தலையில் உள்ள பிரசித்தி பெற்ற அந்த ஆசிரம பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil