க.சண்முகவடிவேல், திருச்சி
திருச்சி திருவெறும்பூர் பெல் அண்ணா தொழிற்சங்க அங்கீகார தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் முன்னிலையில், தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சியின் முக்கிய தொழிற்சாலையாக இருப்பது பெல் தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில் திமுக சார்பிலும், அதிமுக சார்பிலும் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. இந்த தொழிற்சங்கத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கின்றன.
இதில் பெல் சங்க அங்கீகார தேர்தலின் அண்ணா தொழிற்சங்கம் முதன்மை சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் பேசுகையில்; பொதுவாக நம்முடைய மாவட்ட கழக செயலாளர் அவர்கள் கழக தொண்டர்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அந்த அளவுக்கு கழக தொழிற்சங்க வாதிகளுக்கும் முன்னுரிமை கொடுப்பார்கள். தான் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளராக பதவியேற்ற உடனேயே அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளரை மாற்றி தொழிற்சங்கத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக மாவட்ட செயலாளராக இருந்துகொண்டு தொழிற்சங்க பணிகளை தொய்வான பாதையில் கொண்டு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பணியில் இருக்ககூடியவரை மாவட்ட செயலாளராக ஆக்கி அதிரடி காட்டினார்.
பெல் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு தொழிலாளியின் இறப்புக்கு நீதி கேட்டு போராடிய நம்முடைய தொழிற்சங்க நிர்வாகிகளை பழிவாங்கி அவர்களுடைய வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியது பெல் நிர்வாகம். பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த முழு முயற்சியாக பாடுபட்டவர்களில் முதன்மையாக செயல்பட்டவர் நம்முடைய மாவட்ட கழக செயலாளர் என்பது அனைவரும் அறிந்ததே..
கடந்த மார்ச் மாதம் 25 ஆம் நாள் என்று நினைக்கிறேன் பெல் community hall-ல் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க செயற்குழு கூட்டத்தில் பேசிய நம்முடைய மாவட்ட கழக செயலாளர், சங்க தேர்தலில் நம்முடைய சங்கம் முதன்மை சங்கமாக வர வேண்டுமென்றும், பழைய தேர்தலில் உங்களுடைய உழைப்பு மெச்சத்தக்க வகையில் இருந்ததையும் நினைவு கூர்ந்து தொழிற்சங்கத்தினரை பாராட்டினர்.
கூட்டம் முடிந்து உணவு கூடத்திற்கு மாவட்ட கழக செயலாளர் வரும்பொழுது அங்கு நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொழிலாளி மாவட்ட செயலாளரை பார்த்து எங்கள் வாழ்வு இந்த நிலைமைக்கு காரணம் நீங்கள் தான் அண்ணா என்று அவர் சொல்லியபோது கூடியிருந்தவர்கள் நெஞ்சம் எல்லாம் நெகிழ்ந்தது.
வரும் சங்க அங்கீகார தேர்தலில் நாம் கடுமையாக உழைத்து நாம் கையூட்டு பெறக் கூடிய சங்கம் அல்ல, களத்தில் நின்று போராடக்கூடிய சங்கம் என்பதை நிரூபித்து அதிகப்படியான வாக்குகளை பெற்று முதன்மை சங்கமாக வெற்றி பெற வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
இச்சங்கத் தேர்தலில் தொழிலாளர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருப்பதால், தொழிலாளர்கள் நன்கு அறிவார்கள், இச்சங்கம் தொழிலாளர்களுக்காக உழைக்கக்கூடிய சங்கம் என்பதை உணர்வார்கள். எனவே, நாம் நம்முடைய மாவட்ட கழக செயலாளரின் மேலான ஆலோசனையின் கீழ் களத்தில் வெற்றி பெற்று முதன்மை சங்கமாக வருவோம் என்று கமலக்கண்ணன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க பேரவை துணை தலைவர் ம.ராசு, இணைச்செயலாளர் சூரியமூர்த்தி, பொருளாளர் அப்துல் அகமது ஆகியோரது ஆலோசனைகளும் பெறப்பட்டது. கூட்டத்தில், அதிமுக பாசறை ஒன்றிய பொருளாளர் வேங்கூர் மா.சாம்பு, மற்றும் மாவட்ட அதிமுக சார்பு அணி ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதி நிர்வாகிகள், செயலாளர்கள், உறுப்பினர்கள், பங்கேற்றனர். தேர்தலை எவ்வாறு சிறப்பான முறையில் அணுகுவது என்பது குறித்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.