திருச்சி உள்ள கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரபிந்த்குமார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் திருச்சி ரயில்வே மண்டலத்தில் பயணச்சீட்டு பரிசோதராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் ‘சேது’ அதிவிரைவு ரயிலில், திருச்சியில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் அரபிந்த்குமார் பணியில் இணைந்துள்ளார்.
அந்த ரயில் திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் வழியில் டிக்கெட் பரிசோதகருக்கும், கிருஷ்ணமூர்த்தி என்ற பயணிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி ராமேஸ்வரத்தில் வழிபாட்டை முடித்து விட்டு ரயிலில் சென்னை திரும்பியதாக தெரிக்கிறது. மேலும் இவர், சென்னையில் உள்ள தமிழ்நாட்டின் தலைமைச் செயலக அலுவலகத்தில் அலுவலக உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த டிக்கெட் பரிசோதகர் அரபிந்த்குமார், தன்னை பயணி ஒருவர் குடிபோதையில் தாக்கி விட்டதாக விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து இருவரையும் விழுப்புரத்தில் இருந்து விசாரணைக்காக, ரயில்வே பாதுகாப்பு படை படையினர் திருச்சிக்கு அழைத்து வந்தனர்.
இந்த சூழலில் ரயில்வே அலுவலருக்கு ஆதரவாக, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய தமிழ்நாடு அரசு ஊழியரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“