திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள மாவடிகுளத்தில் சில நாட்களாக மீன்கள் உயிரிழந்த நிலையில் மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த மாவடிக்குளத்தை சுற்றி சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் திருச்சி பா.ஜ.க மாவட்ட தலைவரான ஒண்டிமுத்து நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். மீன்கள் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிவதற்கு, தண்ணீரின் மாதிரிகளை சேகரித்து தனியார் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சுமார் 147 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை, இதுவரை தூர்வாரவில்லை என்றும் அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே, மீன்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கான காரணத்தை விரைவாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி - சண்முகவடிவேல்