திமுக தேர்தல் அறிவிக்கையில் அனைத்து மகளிர்க்கும் உரிமை தொகை ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தேர்தல் முடிந்து வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த பிறகு ஒரு வருடம் கழித்து தற்போது தகுதியுள்ள மகளிர்க்கு உரிமை தொகை ஆயிரம் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு மாவட்டங்களில் மகளிர் இடத்தில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அனைத்து மகளிர்க்கும் உரிமை தொகை வேண்டும் என திருச்சியில் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், அனைத்து குடும்ப அட்டதாரருக்கும் ரூபாய் 1000 வழங்க வேண்டும், சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பெண்ணுரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக திருச்சி மாவட்ட புறநகர் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமயபுரம் நால் ரோடு பகுதி மண்ணச்சநல்லூர் செல்லும் பிரிவு சாலையில் உள்ள காந்தி சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் முன்னிலையில், திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் கௌரி ஆனந்த் தலைமையில், மகளிர் அணி பொதுச் செயலாளர் நிஷாராணி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“