Black flag on houses to condemn Trichy Corporation; Officials to investigate
க.சண்முகவடிவேல்
Advertisment
திருச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருச்சி ஆயுதப்படை மைதானத்திலும், மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்திலும் நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
திருச்சி மாநகராட்சி மாமன்ற முகப்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி மேயர் அன்பழகன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து திறம்பட செயல்பட்ட ஊழியர்களுக்கு ரொக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
Advertisment
Advertisements
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழாவில் தலைமைப் பணிமனை மேலாளர் ஷியாமாதார் ராம் தேசியக்கொடி ஏற்றி மிகவும் சிறப்பு சேவையாற்றி யவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். அதேபோல் மத்திய அரசுக்கு சொந்தமான பெல் நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை நிறுவனம், வருமான வரித்துறை அலுவலகம் மற்றும் மாநில அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து பணிமனை, அரசு மருத்துவமனை, பள்ளி கல்லூரி அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் 24 வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அதேநேரம், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலைப்பட்டியில் உள்ள சில வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு குடியரசு தின விழா அனுசரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி பொன்மலைப்பட்டி மாவடிக்குளம் அருகே உள்ளது காருண்யாநகர். இந்த பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டு ஆகியும் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் செய்து கொடுக்கவில்லையாம். இதுகுறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலனில்லையாம்.
எனவே, குடியிருக்க முடியாத மக்களுக்கு குடியரசு தினம் எதற்கு எனக்கூறி குடியரசு தினத்தை புறக்கணித்து தமிழ் புலிகள் மத்திய மண்டல செயலாளர் ரமணா தலைமையில் மக்கள் பாதுகாப்பு பொதுச்செயலாளர் ராஜ்குமார், திருச்சி மாவட்ட தலைவர் சிட்டிசன் மற்றும் காருண்யா நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.
இதனை அறிந்த திருவெறும்பூர் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.