திருச்சி மாநகரில் 50க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பாலக்கரை வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிகளை ஏற்றுவதில் தனியார் பேருந்துகளுக்குள் போட்டி நடைபெறுகிறது.
குறிப்பாக விடியற்காலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை இந்த விபரீத நிகழ்வு நடந்து வருகிறது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து தெப்பக்குளம் வரை இந்த தனியார் பேருந்துகள் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சாலையில் செல்லும் பொதுமக்கள் பலியாவது வேதனைக்குரியதாக உள்ளது. குறிப்பாக தனியார் பேருந்துகள் போட்டி போட்டு செல்வதால் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மீது மோதி உயிரிழப்புகள் ஏற்படும் நிகழ்வு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு செல்வது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில், 2025 புத்தாண்டு தொடங்கிய இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் மேலப்புதூரிலிருந்து பாலக்கரை நோக்கி போட்டி போட்டு சென்றதில் சாலையில் சென்ற முதியவர் மீது ஒரு பேருந்து மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதிகளவு இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் முன் அனுபவம் இல்லாத இளம் வயது ஓட்டுனர்கள் பேருந்துகளை முறைப்படியே ஓட்டுவது இல்லை. வருமானத்தை பெருக்குவதற்காக சிலரது வாழ்க்கையை அழிக்கும் செயலில் இந்த ஓட்டுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காலை 5 மணி அளவில் பயணிகளை ஏற்ற தொடங்கும் தனியார் பேருந்துகள் புதிதாக ஓட்டுநர் தொழிலுக்கு வருபவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் செயலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி இரவு பணி முடித்து மீண்டும் அதிகாலை பணிக்கு வரும் ஓட்டுநர்கள் இது போன்ற அதிவேகமாக, பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பேருந்துகளை இயக்குவது வேதனை அளிக்கிறது.
எத்தனை முறை எச்சரிக்கை விடுத்தாலும், தனியார் பேருந்துகள் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு சென்று விபத்தை ஏற்படுத்துவதை தடுக்க மாநகர காவல் ஆணையர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“