போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தர வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, டி.டி.எஸ்.எப், எச்.எம்.எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கிய நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்கிறது.
இந்த சூழலில், திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட போக்குவரத்து பணிமனைகளில், நேற்று தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஆகியோருக்கான ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஓட்டுநர்கள் முறையான ஓட்டுநர் உரிமத்தை வைத்துள்ளனரா, நடத்துநர்கள் முன்னதாக பணியில் இருந்து பயிற்சி பெற்றுள்ளனரா உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று திருச்சியில் சில வழித்தடங்களில் தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைக் கொண்டு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் நகரப் பேருந்தில் தற்காலிக நடத்துநர் ஒருவர் கையில் மஞ்சள் பையை வைத்துக்கொண்டு பயணிகளுக்கு பயணச் சீட்டு வழங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடரும் நிலையில் பொது மக்களுக்கு இடையூறு இல்லாத நிலையில் போக்குவரத்தை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதாக தெரிவித்து தற்காலிக ஓட்டுனர்கள் நடத்துனர்களை பணி அமர்த்தி பேருந்துகளை இயக்கும்போது, தற்காலிக நடத்துநர்களில் சிலர் மஞ்சள் பையை வைத்து டிக்கெட் கொடுக்கும்போது இவர் நடத்துனரா, பயணியா என்ற குழப்பம் பயணிகள் முன் எழுந்துள்ளது. இதை காரணமாக வைத்து சமூக விரோத கும்பல் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து பணத்தை வசூலித்து எடுத்துச் சென்று விடக்கூடாது என்ற அச்சமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“