க.சண்முகவடிவேல்
Trichy | Minister Anbil Mahesh: திருச்சி பொன்மலை ரயில்வே குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள ரயில்வே இடத்தில் புழக்கத்தில் இருந்த பாதையை திடீரென ரயில்வே நிர்வாகம் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை வழக்கம்போல் மீண்டும் பயன்படுத்தும் வகையில் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக, அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தென்னக ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மேலகல்கண்டார் கோட்டை, ஆலத்தூர் கீழ கல்கண்டார் கோட்டை, பகுதிகளை சுற்றி சுமார் 5,000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பொன்மலை பகுதியில் உள்ள ரயில்வே பணிமனை, ரயில்வே மருத்துவமனை, இரயில்வே அக்கவுண்ட்ஸ், இன்ஜினியரிங் அலுவலகங்கள், கனரா வங்கி, டாக்டர் அம்பேத்கார் திருமண மண்டபம், ரயில்வே கே.வி.பள்ளிக்கூடங்கள் மற்றும் புகழ் பெற்ற பொன்மலை வார சந்தை போன்ற இடங்களுக்கு தடை இன்றி சென்றுவர, அப்பகுதியில் உள்ள தற்போதைய சி டைப் (C TYPE) சாலைகள் மிகவும் பயனுள்ளதாகவும் குறிப்பட்ட நேரத்தில் சென்றுவர மிகவும் வசதியாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த சி டைப் சாலைகளை ரயில்வே நிர்வாகம் மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கியும், தடுப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.
சி டைப் சாலை மூடப்படும் பட்சத்தில் பொதுமக்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே ஓய்வூதியர்களும் மேற்கூறிய இடங்களுக்கு சென்றுவர மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே, சாலைகளை மூடும் எண்ணத்தை கைவிடுமாறும், குண்டும் குழியுமாக உள்ள சி டைப் சாலைகளை சீரமைத்து தருமாறும் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளரிடம் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மனு அளித்தார்.
இந்த சந்திப்பின்போது, மாநகர திமுக செயலாளர் மு.மதிவானண். எஸ் ஆர் எம் யு பொதுச்செயலாளர் விரசேகரன், பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ், வட்டகழக செயலாளர் வரதராஜன் மற்றும் எஸ் ஆர் எம் நிர்வாகிகள், பொன்மலை பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“