scorecardresearch

திருச்சி காவிரி பாலம் இன்று முதல் மூடல்.. இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.. ஆட்சியர் அறிவிப்பு

Trichy cauvery bridge: பராமரிப்பு பணிகளுக்காக திருச்சி காவிரி பாலம் இன்று முதல் அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு மூடப்படுகிறது.

திருச்சி காவிரி பாலம் இன்று முதல் மூடல்.. இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.. ஆட்சியர் அறிவிப்பு

திருச்சியில் இருந்து பல்வேறு பகுதிகளின் போக்குவரத்துக்கு முக்கிய பாலமாக இருக்கும் காவிரி பாலம் இன்று (நவம்பர் 20) நள்ளிரவு முதல் முழுமையாக மூடப்படுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக அனைத்து போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டு மூடப்படுகிறது. இரு சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை நாள்தோறும் ஏராளமானோர் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது பாலம் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் பகுதிகளை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலம் கடந்த 1976-ம் ஆண்டு, முன்னாள் மத்திய உள்ளாட்சித்துறை அமைச்சர் பிரம்மானந்தா ரெட்டியால் திறந்து வைக்கப்பட்டது. இந்தகாவிரி பாலம் நீளம் 541.4 மீட்டர், அகலம் 15 மீட்டர், நடைபாதையின் அகலம் 2.05 மீட்டர், இந்தப் பாலத்தில் 34.1 மீட்டர் கொண்ட 14 கண்களும், 33.3 மீட்டர் கொண்ட இரண்டு கண்களும் உடையது.

தற்பொழுது ஸ்ரீரங்கம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலமாக விளங்குவதால் இந்தப் பாலத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர். பாலம் கட்டி 45 ஆண்டுகளுக்கும் மேலானதால் இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது. காவிரி பாலத்தில் தூண்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கனரக வாகனங்கள் செல்லும் போது அதிர்வு

இதுவரை சீரமைப்பு பணிக்காக மட்டும் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1.35 கோடி, 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.35 லட்சம், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் இப்பாலம் சேதமடைந்துள்ளதால் நெடுஞ்சாலைத்துறையின் தொழில்நுட்பக்குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர். பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து தமிழக அரசு பாலத்தை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டு ரூ.6.87 கோடி ஒதுக்கி உள்ளது. பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி, மேலும் பணிகள் முடிவடைய
5 மாத காலம் ஆகும் என்பதால், மேற்படி காவிரிப் பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை 10.09.2022 அன்று முதல் இருசக்கர வாகனங்கள் நீங்கலாக மாற்றுப்பாதையில் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து வித போக்குவரத்துக்கும் தடை

இந்நிலையில் பாலத்தூண்களின் மேல் அதிர்வு தாங்கிகள் (Elastomeric Bearings) பொருத்தும் பணி ஒவ்வொறு தட்டுகளாக (Deck Slabs) மேற்கொள்ளும் நிலையில், பாலத்தில் இரு சக்கர வாகனங்கள் பயணித்தால் தட்டுகளின் தளமட்டம் மாறுபாட்டிற்கு உள்ளாகும் என்கிற காரணத்தால் இரு சக்கர வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இப்பணி நாளை 21.11.2022 முதல் துவங்க உள்ளதால் புனரமைப்பு பணியை விரைவில் முடிக்க 20.11.2022 நள்ளிரவு முதல் பாலத்தில் செல்லும் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்து முன்னர் அறிவிக்கப்பட்டப்படி இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வித வாகனங்களும் கீழ்கண்ட மாற்றுப்பாதையில் செல்ல உத்தரவிடப்படுகிறது.

மாற்று வழிகள்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக (காவிரி தென் கரை சாலை) சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை – திருச்சி – திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை (காவிரி இடது கரை சாலை) வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி ட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை – திருச்சி – திண்டுக்கல் – சாலை) பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி ஓயாமரி வழியாக (காவிரி தென்கரை சாலை) அண்ணாசிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம்.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1. டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அவ்வாறே சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1.டோல்கேட் சென்று செல்லலாம். காவிரிப் பாலம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி மேற்கண்ட மாற்றுப் பாதையில் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வித வாகனங்களும் பயணம் செய்து நல்ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்கிடும்படி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகர வாசிகளும், புறநகரவாசிகளும் ஒரே நேரத்தில் திருச்சி – சென்னை பைபாஸில் உள்ள காவிரி பாலத்தை பயன்படுத்த இருக்கும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசலை பொதுமக்கள் சந்திக்க நேரிடும் என்பதால் போர்க்கால அடிப்படையில் காவிரி பாலத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy cauvery bridge closes from september 20