திருச்சியில் இருந்து பல்வேறு பகுதிகளின் போக்குவரத்துக்கு முக்கிய இணைப்பு பாலமாக இருக்கும் காவிரி பாலம் பராமரிப்பு பணிக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி மூடப்பட்டது.
Advertisment
காவிரி பாலம் மூடப்பட்டதால் திருச்சி மாநகர மக்கள், பள்ளி கல்லூரி பணிக்குச் செல்லும் நபர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
பாலத்தின் பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் கடந்த 8 ஆம் தேதி ஓரிரு வாரத்தில் காவிரி பாலம் திறக்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10வது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வமுத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும், அதேபோல் பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் 19 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தும் பேசிய அமைச்சர் கே என் நேரு திருச்சி மாநகர மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் ஓரிரு நாட்களில் காவிரி பாலம் திறக்கப்படும் என அறிவித்தார்.
Advertisment
Advertisements
இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்; காவிரி பால பணிகள் முடிவடைந்து தார் போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . மார்ச் 1 முதல் 3 ஆம் தேதிக்குள் கண்டிப்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும்.
திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்திய கூறுகள் ஆய்வு தொடங்க உள்ளதால் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணிகளை நிறுத்தி வைத்துள்ளோம் என்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், நகர பொறியாளர் சிவபாதம், மத்திய மாவட்ட பொறுப்பாளர் பிரமுகர் வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுவரை சீரமைப்பு பணிக்காக மட்டும் கடந்த அதிமுக ஆட்சியில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1.35 கோடி, 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.35 லட்சம், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் இப்பாலத்தில் முழு பராமரிப்பு பணிக்காக தமிழ்நாடு முதல்வர் ரூ.6 கோடியே 87 லட்சம் ஒதுக்கி பராமரிப்பு பணிகளை விரைந்து நடத்திடவும் ஆணையிட்டிருந்தார். காவிரி பாலத்தின் இறுதிப் பணிகளை மேம்படுத்தும் பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் ஈரோடு தேர்தல் பணியில் இருந்ததும் காவிரி பாலம் திறப்பு கால தாமதம் ஆனதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“