திருச்சி மாவட்டத்தின் பிரதான பாலங்களில் ஒன்றானதும், திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கம் தீவையும் இணைக்கும் இணைப்புப் பலமாகவும் காவிரி பாலம் திகழ்கின்றது. இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது.
மேலும் ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் தூண்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதுவரை சீரமைப்பு பணிக்காக மட்டும் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1.35 கோடி, 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.35 லட்சம், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டது.
தற்போது மீண்டும் இப்பாலம் சேதமடைந்துள்ளதால் நெடுஞ்சாலைத்துறையின் தொழில் நுட்பக்குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர். அப்போது இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்துள்ளது தெரியவந்தது. இதனால் பாலத்தை உடனடியாக சீரமைக்க ரூ.6.87 கோடியை அரசு ஒதுக்கியது. கடந்த 10.09.2022 நள்ளிரவு முதல் பாலம் மூடப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பாலத்தில் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மேலாக பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் காவிரி பாலத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதித்து காவிரி பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

பொதுமக்கள் சிரமத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் இருசக்கர வாகனங்களை மட்டும் செல்ல அனுமதிருந்தது. இந்நிலையில் பாலத்தை தூக்கி வைத்து 2 வார காலம் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் வெள்ளிக்கிழமை (18.11.2022) அல்லது திங்கள் கிழமை (21.11.2022) முதல் முழுவதும் மூடப்படும் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிடுவார் எனவும், கூடுதல் பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“