Advertisment

6 மாத கால புனரமைப்பு பணிகள் நிறைவு: திருச்சி காவிரி பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

திருச்சி காவிரி பாலம் முழுமையாக சீரமைக்கப்பட்ட நிலையில் அமைச்சர் கே.என். நேரு காலையில் வாகனப் போக்குவரத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

author-image
WebDesk
New Update
6 மாத கால புனரமைப்பு பணிகள் நிறைவு: திருச்சி காவிரி பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் 1976-ம் காவிரி மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 541.46 மீட்டர் நீளமும் , சாலையின் அகலம் 19.20 மீட்டர் அகலமும், 16 கண்கள் கொண்டதாக பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்ட போது வைக்கப்பட்ட 192 அதிர்வு தாங்கிகளில் அவ்வப்போது பழுது ஏற்பட்டது. அதன் காரணமாக பாலம் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பல முறை சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட நிலையில், பாலத்தை முழுமையாக சீரமைக்க முடியவில்லை. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு இந்த பாலத்தை முழுமையாக சீரமைக்க அமைச்சர் கே.என். நேரு உத்தரவிட்டார்.

Advertisment

இதையடுத்து பாலத்தில் சீரமைப்பு பணிகளுக்காக மட்டும் ரூ.6.87 கோடி ஒதுக்கப்பட்டது. பேரிங்குகள் மாற்றுதல், இரு கண்களுக்கு இடையேயான இணைப்புகளை சீரமைத்தல், புதிய தார் சாலை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள ஏதுவாக கடந்த செப்டம்பர் முதல் காவிரி பாலத்தில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.

வாகனங்கள் கும்பகோணத்தான் சாலை, ஓடத்துறை பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன. பிரதான பாலத்தில் போக்குவரத்து பயன்பாடு இல்லாத காரணத்தினால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நெடும் பயணம் மேற்கொண்டவர்களும் நெடுஞ்சாலையில் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்களும் முனைப்புடன் ஈடுபட்டனர்.

திருச்சியில் மெட்ரோ

இதற்கிடையே பாலத்தில் பேரிங்குகள் மாற்றப்பட்டு, இணைப்பு பகுதிகளும் புதிதாக அமைக்கப்பட்டு, புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. மேலும் நடைபாலம் சீரமைத்தல், கைப்பிடி சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடந்து முடிந்தது. பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (மார்ச் 4) காலை 5.50 மணியளவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து வாகனப் போக்குவரத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது, "1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் நூறு ஆண்டுகளுக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க ஆட்சியின்போது பாலத்தை சீரமைப்பு செய்தவர்கள் முறையாக அதை மேற்கொள்ளாததால் பாலம் மிகவும் மோசமடைந்தது. அதன் காரணமாக தற்போது மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்த உடன் பாலம் 6.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

publive-image

6 மாத காலம் மாநகரின் போக்குவரத்தை போலீசார் சிறப்பாக கையாண்டனர். இந்த பாலத்திற்கு அருகே புதிய பாலம் கட்ட 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மெட்ரோ ஆய்வு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

அந்த ஆய்வு பணிகள் முடிந்த பின்பு புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் ஒலிம்பிக் அகாடமி வழங்க நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மத்திய மண்டல காவல் துறை தலைவர் கார்த்திகேயன், காவல்துறை ஆணையர் சத்யபிரியா மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment