திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதிகள் சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை, பல்கேரியா, தென் கொரியா, ரஷியா, இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் கென்யா நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விசாரணை கைதிகளாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டு இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 1946 இன் கீழ் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலருக்கு விசாரணை முடிந்தும் விடுவிக்கப்படவில்லை எனக்கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று(ஆக.22) விசாரணை கைதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள் 20க்கும் மேற்பட்டோர் மரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை திருச்சி மாநகர காவல்துறையினர் 300க்கும் மேற்பட்ட போலீசார் சிறப்பு முகாமில் சோதனை மேற்கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 153 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று, பறிமுதல் செய்த செல்போன்களை திரும்பி வழங்க வேண்டும், விசாரணை முடிந்தும் விடுவிக்கப்படாமல் தண்டனை பெரும் நிலை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, “எங்களைக் காப்பாற்றுங்கள்” “HELP US” என்ற வார்த்தைகள் எழுதிய பதகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை கைதிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி: க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil