திருச்சியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி மீது போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டம், பெரியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு திருச்சி அண்ணா நகரில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவருடன் தொழில் ரீதியான நட்பு ஏற்பட்டது. அப்போது சதீஷ்குமார் தனது தொழிலை விரிவு படுத்துவதற்காக பல்வேறு வங்கிகளில் கடன் பெற முயற்சித்து வருவதாக வெங்கடேசனிடம் தெரிவித்துள்ளார்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி சசிகலா, சதீஷ்குமாருக்கு லோன் வாங்கி தருவதாக கூறி லட்சகணக்கான பணத்தை பெற்றுள்ளனர். இதேபோல், சதீஷ்குமாரின் நண்பரான தஞ்சையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் இருந்தும் பல லட்ச ரூபாயை பெற்றுள்ளனர். ஆனால், கூறியதை போன்று லோன் வாங்கி தராததால், பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.
இதுபோன்று சுமார் ரூ. 10 கோடி வரை மோசடி செய்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் புகாரளித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்