ஃபீஞ்சல் புயல் பாதிப்புகளால் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து தடைபட்டது.
இதையொட்டி மாற்று வழித்தடங்களில் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபீஞ்சல் புயல் தாக்கம் காரணமாக கனமழை வெளுத்து வாங்கியதன் விளைவாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை தலைகீழாக புரட்டி போடப்பட்டுள்ளது.
பல கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தரைப் பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மலட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதாவது, விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் இருந்து அரசூர் கிராமம் இடையிலான நெடுஞ்சாலையில் மலட்டாறு பாலத்தில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு வெள்ளநீர் ஓடியது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து வரும் வாகனங்களும், திருச்சியில் இருந்து வரும் வாகனங்களும் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இன்று (நவம்பர் 3) நிலவரப்படி மலட்டாறு பாலத்தில் வெள்ளப்பெருக்கின் அளவு குறைந்துள்ளது.
இதையொட்டி பாலத்தின் ஒருவழித் தடத்தில் மட்டும் போக்குவரத்து சீரானது. மீண்டும் வாகனங்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. இருப்பினும் இந்த ஒருவழித் தடத்திலேயே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்களும், திருச்சியில் இருந்து சென்னை வரும் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மலட்டாறு பாலத்தின் மற்றொரு வழித்தட பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, வாகனங்களை இயக்க முடியாத நிலை காணப்படுகிறது. இது 1973ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழித்தடம் கனமழையால் சேதமடைந்துள்ளது. எனவே முறையான ஆய்விற்கு பின்னரே வாகனங்கள் இயக்கப்படுவது பற்றி முடிவு செய்யப்படும்.
இதுபற்றி இருவேல்பட்டு கிராம மக்கள் கூறுகையில், 1972ஆம் ஆண்டு இதுபோன்ற வெள்ளத்தை பார்த்திருக்கிறோம். ஆனால் அப்போது இந்த அளவிற்கு தண்ணீர் கிடையாது. கிராமங்களை விட்டு மக்கள் வெளியேறினர்.
50 ஆண்டுகளுக்கு பின்னர் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. வராஹி கோயில் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 50 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளதால் சாத்தனூர் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
ஏரிகளும் உடைந்துள்ளன. இதனால் பெரிதும் தவித்துவிட்டோம், இன்று வரை அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கூறினர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் வடிந்துவிட்டதால் 16 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் போக்குவரத்து ஒரு வழித்தடத்தில் துவங்கி உள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் பண்ருட்டி வழியாகத்தான் இயக்கப்பட்டு வருகின்றன. அரசூர், இருவேல்பட்டு இடையே மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்துவிட்டாலும், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.