தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சையில் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று நடைபெறவுள்ள, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ப்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று திருச்சி விமான நிலையம் வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் முதல்வரை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் அரசு அதிகாரிகள், திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பில், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகர ஆணையர் வைத்திநாதன், ஐ.ஜி.கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் காமினி, டி.ஐ.ஜி.பகலவன், எஸ்.பி.வருண்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், கதிரவன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
விமான நிலைய சிறப்பு நுழைவு வாயில் வழியே வெளியே வந்த முதல்வரை அங்கு திரண்டிருந்த திமுகவினர், பொதுமக்கள் உற்சாகத்துடன் முதல்வர் வாழ்க என்ற கோசமிட்டனர். தொண்டர்களை கவனித்த முதல்வர் நடந்து சென்று தொண்டர்களின் அன்புப்பரிசினை பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக தஞ்சாவூர் சென்றார். அங்கு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி அரங்கில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டிருக்கின்றார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின்க்கு திக சார்பாக 'சமூக நீதிக்கான சரித்திர நாயகன்' விருதை கி வீரமணி வழங்குகிறார். மேலும், கீ.வீரமணி தொகுத்த தாய் வீட்டில் கலைஞர் என்ற நூலை ஸ்டாலின் வெளியிட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொள்கிறார்.
இந்நிகழ்ச்சியில் திக துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொது செயலாளர் அன்புராஜ் மற்றும் திக , திமுக நிர்வாகிகள் பலர் கந்து கொள்கின்றனர். நிகழ்ச்சிகள் முடிந்து மாலை தஞ்சையில் இருந்து சாலை மார்க்கமாக மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் சென்னை செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“