திருச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற திட்டங்களை பொதுமக்களுக்கு அர்ப்பணித்திடவும் தமிழக முதல்வர் ஒருநாள் அரசு முறை பயணமாக நாளை காலை விமானம் மூலம் திருச்சி வருகின்றார். இதுகுறித்த விபரம் வருமாறு;
தமிழகம் முழுவதும் மீண்டும் சுற்றுப்பயணம் செல்லத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த ஓரிரு மாதங்களாக முதுகுவலியால் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையை ஏற்று வெளியூர் நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த இவர், இப்போது மீண்டும் பரபரப்பாக வெளியூர்களுக்கு விசிட் அடித்து வருகிறார்.
அந்த வகையில் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சிக்கு நாளை வரும் முதல்வர், லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.
திருச்சி அண்ணா விளையாட்டரங்கம், மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் உள்ள டிஎன்பிஎல் ஆலை, மணிகண்டம் அருகேயுள்ள சன்னாசிப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 22,716 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், 5,639 திட்டங்களை திறந்து வைத்து 5,951 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

முதல்வர் பங்கேற்கும் விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட அமைச்சர்கள் கே.என்.நேரு முன்னேற்பாடுகளை முழு வீச்சில் கவனித்து வருகிறார்.
இதையொட்டி 3 இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அண்ணா விளையாட்டரங்கில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.655 கோடி மதிப்பிலான 5,639 திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். ரூ.308 கோடி மதிப்பிலான 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.79 கோடி மதிப்பில் ரூ.22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்களை வழங்கி, மணிமேகலை விருது மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்களுக்கு விருதுகளை வழங்கி பேச உள்ளார். விழாவில்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அதைத்தொடர்ந்து, மொண்டிப்பட்டி டிஎன்பிஎல் தொழிற்சாலையில் ரூ.1,350 கோடியில் கட்டப்பட்டுள்ள 2-ம் அலகு மற்றும் சிப்காட் தொழிற்பூங்காவைத் திறந்து வைக்கிறார்.
அதன்பின், அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் மணிகண்டம் அருகே உள்ள சன்னாசிப்பட்டிக்கு வரும் முதல்வர், அங்கு மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் இயன்முறை சிகிச்சை பெற்று வரும் பயனாளி ஒருவரை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து நலம் விசாரிக்கிறார்.

பின்னர் அதே கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து விமானநிலையம் வந்து, சென்னைக்குப் புறப்படுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் செல்லக்கூடிய வழித்தடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், எஸ்.பி சுஜித்குமார், எம்எல்ஏ சவுந்தர பாண்டியன், மாநகராட்சி பொறியாளர் (பொ) சிவபாதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மழை பெய்தாலும் பயனாளிகள் நனையாத வண்ணம் பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டும் பிரம்மாண்டத்தை விட திருச்சியில் ஒரு படி மேலாக பிரம்மாண்டம் காட்டப்படும் எனத் தெரிகிறது.

திருச்சியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் திண்டுக்கல், சிவகங்கை, கோவை என மூன்று மாவட்டங்களுக்கு விசிட் அடித்திருக்கும் நிலையில் 4-வது மாவட்டமாக திருச்சிக்கு அவர் வருகை தருகிறார்.
க.சண்முகவடிவேல்