திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும், சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்குவது சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் மாரியம்மன் வேறு எந்த தலத்திலும் காணப்பெறாதபடி அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக, சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறார்.
இத்தகைய சிறப்புக்குரிய இத்தலத்தில் சித்திரைப் பெருந்திருவிழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தேரோட்டத்தில் திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் தேரோட்டமன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை தேர் திருவிழா ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், மே 3 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்