தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. இதனையடுத்து தமிழகத்தில் 19 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சியிலும் நேற்றிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகின்றது. ஆனாலும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு இல்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த சூழலில் திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே மினியூர் கிராமத்தில் இருந்து கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்வதற்காக அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு பள்ளி மாணவர்கள் வந்துள்ளனர்.அப்போது அப்பகுதியில் கனமழையின் காரணமாக யானைகள் பிரிவு சாலையில் வந்த வாகனங்கள் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு சென்று கொண்டிருந்தன. அப்போது திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் மினியூர் கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் நவீன்குமாருக்கு கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் கலைச்செல்வன் மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த செல்வராஜ் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சாலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டியை அப்பகுதி பொதுமக்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்தில் கால் பகுதியில் பெரும் சேதம் ஆன மாணவனுக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த விபத்து குறித்து வளநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவில் பெய்ய தொடங்கிய மழை இன்றும் தொடர்ந்து பரவலாக பெய்து வருகிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தொடர் மழையிலும் பள்ளிக்குச் சென்ற மாணவன் விபத்துக்குள்ளானது பெற்றோர்கள் மத்தியில் சோகத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியரின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த விபத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு மருத்துவ உதவி செய்து தர வேண்டும், மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.கே.மோகன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர்குமார் தெரிவிக்கையில்; திருச்சியை பொறுத்த வரையில் மாநகர் பகுதியை மட்டும் தான் மழை நிலவரம் மற்றும் அதன் பாதிப்புகளை திருச்சி மாவட்ட நிர்வாகம் கணக்கிடப்படுவதாகவும், புறநகர் பகுதியில் குறிப்பாக வளர்ந்து வரும் பகுதியில் மழையினால் பொதுமக்கள் படும் கஷ்டங்களை மாவட்ட நிர்வாகம் கவனிப்பதேயில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
உதாரணத்திற்கு திருச்சி புறநகரில் வளர்ந்து வரும் பகுதியான ஸ்ரீரங்கம் தாலுக்காவிற்குட்பட்ட கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர் மற்றும் திருவெறும்பூர் தொகுதிகுட்பட்ட திருச்சி மாநகரில் புதிதாக இணைக்கப்பட்ட ஐந்து வார்டுகள் மற்றும் கருமண்டம், தீரன்நகர், கே.கே.நகர், ஓலையூர், குண்டூர், மாத்தூர் உள்ளிட்ட திருச்சி புறநகரில் வளர்ந்து வரும் பெரும்பாலான பகுதிகளில் சாலை வசதிகள் முறையாகயில்லை என்றும், இந்த பகுதியிலிருந்து அநேக குழந்தைகள் மாநகரில் இயங்கும் பள்ளியில் படிப்பதாகவும். அதனால் மழை காலங்களில் காலை நேரங்களில் வீட்டிலிருந்து பள்ளிக்கு குழந்தைகளை விட படாதபாடு படவேண்டியுள்ளது என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
மேலும் மழை அளவை மட்டுமே கணக்கிடுவதாகவும், மழையினால் சாலை உள்ளிட்டவை பழுது ஏற்படுவதால் பொதுமக்கள் படும் இன்னல்களை மாவட்ட நிர்வாகம் கணக்கிட தவறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் விடிய, விடிய மழை பெய்தால் மட்டுமே பள்ளிக்கு விடுமுறை என கடந்த காலங்களில் முடிவு எடுக்கப்பட்டதை போல தற்பொழுதும் இதே நடைமுறை கடைபிடிக்கப்படுவது வருத்தமளிக்கிறது. மேலும் இனி வரும் காலங்களில் திருச்சி மாவட்ட ஆட்சியர் கனமழை மற்றும் சாதாரண மழை காலங்களில் மாவட்ட முழுவதும் விடுமுறை என்பது போன்ற அதர பலசான நடைமுறையை பின்பற்றாமல், தாலுகா வாரியாக மழை அளவை கணக்கிட்டு குழந்தைகள், பெற்றோர்கள் பாதிப்பில்லாதவாறு தாலுகா வாரியாக முடிவெடுப்பதுடன், மழை காலங்களில் பள்ளிகளை தாமதமாக திறப்பது போன்ற தற்பொழுது காலத்திற்கு ஏற்ற சிறந்த முடிவெடுக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், திருச்சியில் பெய்த மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடாத மாவட்ட ஆட்சியரை சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் சமூக வலைதள பக்கங்களில் வைத்து வறுத்தெடுத்து வருகிறார்கள்.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“