/indian-express-tamil/media/media_files/2025/06/26/trichy-drug-rally-2025-06-26-18-20-27.jpeg)
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாணவ, மாணவியர்களுடன் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்று விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மதுபானம், கள்ளச்சாராயம் அருந்துவதினாலும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதினாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பழகத்திற்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் வாசிக்க, மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் என அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கி, கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.எஸ்.குமரவேல், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் உதய அருணா, உதவி ஆணையர் (கலால்) உதயக்குமார், மேற்கு வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி; போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்.
மேற்கண்ட உறுதிமொழியினை அனைத்து மாணவ, மாணவிகளும், அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் ந.காமினி தலைமையில் காவல் அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். திருவெறும்பூர் ஏ.எஸ்.பி. அரவிந்த் பனாவத், திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பிரச்சார பேனரில் கையொப்பம் இட்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன், போக்குவரத்துப்பிரிவு ஆய்வாளர் ஹனிபா மற்றும் போலீசார் கலந்துக்கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்திட்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.