/indian-express-tamil/media/media_files/2025/06/09/5Zhai4vj7w7UIIEi0Qje.jpeg)
Trichy
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பு வைப்பறையில் இன்று (09.06.2025) ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் அவர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஆய்வை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, 16,076 எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உன்னிப்பாக பரிசோதிக்கப்பட்டன. இதில் 8,637 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (Ballot Units), 3,449 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் (Control Units), மற்றும் 3,990 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும் அடங்கும்.
இந்த ஆய்வின்போது திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருண், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர், தேர்தல் தனி வட்டாட்சியர் செல்வகணேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
தேர்தல் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ’அரசியல் கட்சியினர் பொது இடங்களில் வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 90% கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 10% கொடிக்கம்பங்களை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அவை முழுவதுமாக அகற்றப்படும்.
ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், திருச்சி மாவட்டத்தில் 389 கிலோமீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சி மற்றும் டி வாய்க்கால்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழும், வேளாண் பொறியியல் துறை மூலமாகவும் தூர்வார ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் கொரோனாவின் துணை வகை தற்போது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், நாம் பாதுகாப்பாக இருப்பது அவசியம். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. கொரோனா குறித்து அச்சம் தேவையில்லை. ஆனால், பாதுகாப்பாக இருப்பது அவசியம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம் என்பேன்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போஸ்டர் ஒட்டுவதற்கு குறிப்பிட்ட இடங்கள் உள்ளன. அதை மீறி பொது இடங்களில், பள்ளி மற்றும் கல்லூரி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டினால், அவை அகற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் ஆங்கிலத்தில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வணிகர்களை அழைத்து கூட்டம் போட்டு, தமிழில் வைக்கப்படும் பெயர் பலகை ஆங்கிலத்தை விட பெரியதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்காக 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. பல கடைகள் பெயர் பலகைகளை மாற்றி அமைத்துள்ளன. மாற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழில் பெயர் பலகை நிச்சயமாக வைக்கப்பட வேண்டும். அதையும் மீறி பெயர் பலகைகளை மாற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.