க.சண்முகவடிவேல்
Lok Sabha Election | Trichy: தேர்தல் வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் இருந்து, வாக்குப்பதிவுக்கு கணினி வழி குழுக்கள் முறையில் தேர்வான வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சியின் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மா.பிரதீப்குமார் இன்று அந்தந்த கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:-
திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தை நேற்று குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் தொகுதி வாரியாக இன்று பிரித்து அனுப்பப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் 2547 வாக்கு சாவடி மையம் உள்ளது. 3053 வாக்குபதிவு இயந்திரம், 3053 கட்டுப்பாட்டு கருவிகள், 3307 விவிபேட் உள்ளது.
மண்டல அலுவலர்களுக்கு நாளை பயிற்சி வழங்கப்படுகிறது. வாக்கு அலுவலர்களுக்கு வரும் 24 ஆம் தேதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. திருச்சியில் நேற்று மாலை வரை விதிகள் மீறி கொண்டுவரப்பட்ட ரூ.70 லட்சம் ரூபாயில் முறையான ஆவணங்களை காட்டிய நபர்களின் ரூ.7 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.63 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. இன்று காலை ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
ஆவணம் சரியாக இருந்தால் தொகை திருப்பி ஒப்படைக்கப்படும். இறந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டாம் எனவும், சிலைகளின் கீழே உள்ள பெயர்களை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படியே சிலைகள் சில இடங்களில் மூடப்படாமல் கீழ் இருக்கும் கல்வெட்டுகள் மூடப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“