பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் அதே வேளையில் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளும் களைகட்டும். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 2024-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நேர அவசரம் தவிர்க்கும் பொருட்டும், அரசிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடும் பொருட்டும் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை போட்டி நடத்தப்படும் 20 தினங்களுக்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு / வடமாடு போட்டிகளை நடத்தும் விழா குழுவினர் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசாணை எண்:7 நாள்: 21.07.2017-இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றியே போட்டியினை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அரசிடம் முன் அனுமதி பெற்று மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும். அரசாணை வெளியிடப்பட்டு கடந்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற கிராமங்களில் மட்டுமே தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
அரசிடமிருந்து முன் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்துவோர் மீது குற்றிவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்குறித்த அறிவுரைகளை பின்பற்றி போட்டி நடத்த உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்டவாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“