திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் பொது மக்களின் நலன் காக்க அவரவர் இருப்பிடங்கள் அருகிலேயே புற்றுநோய் கண்டறியும் முகாம்களுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்க திட்டம் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்டம், உறையூர் காந்திபுரம் நகர்ப்புர நலவாழ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், இத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேசியதாவது: இத்திட்டத்தின் மூலம் பொதுவான வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் ஆகிய 3 புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை வழங்கி உயிரிழப்புகளை தவிர்த்து அவர்களின் வாழ்நாளை நீட்டித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தும் உயரிய நோக்கோடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
/indian-express-tamil/media/post_attachments/aaab24d7-d1b.jpg)
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண் சுகாதார தன்னார்வலா்களைக் கொண்டு, புற்று நோய்களுக்கான விழிப்புணா்வு வழங்கி மற்றும் பரிசோதனை செய்து கொள்வதற்கான அழைப்பிதழை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் 167 நலவாழ்வு மையங்கள் மற்றும் 84 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இச்சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு புற்று நோய்க்கான இலவச பரிசோதனை வசதிகள் பொதுமக்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின்படி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை வாய் புற்றுநோய் பரிசோதனையும் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, புற்று நோய்க்கான அறிகுறி கண்டறியப்பட்டால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 10 மருத்துவமனைகள் மற்றும் முதல்வட் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவர்.
இத்திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 22.20 லட்சம் நபர்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோதனைகளும் மற்றும் 7.76 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
பொதுமக்கள் பணிபுரியும் இடங்களான அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்களில் மருத்துவக் குழுவினரைக் கொண்டும், முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளிலும் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இலவச புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
இதனைத்தொடா்ந்து, புற்றுநோய் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை பார்வையிட்டு, மருத்துவா்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிகழ்வில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். குமரவேல், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கோபிநாத், மாவட்ட சுகாதார அலுவலர் ஹேமசந்த் காந்தி, கூடுதல் மாநகர நல அலுவலர் எழில்நிலவன் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்