கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருச்சி தனியார் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பேராசிரியர் பால் சந்திரமோகன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பால் சந்திரமோகன் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக முதுகலைப்பட்ட படிப்பு மாணவிகள் சிலர் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். வகுப்பறையில், தங்களுடன் மிக நெருக்கமாக வந்து அமர்ந்து கொண்டு கால்களால் சுரண்டுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது என பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்திருந்தனர். பின்னர் கல்லூரி ஏழு உறுப்பினர்கள் கொண்ட உள் புகார்கள் குழுவுக்கு (ஐ.சி.சி) குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டது. ஏப்ரல் மாதம் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என தெரியவந்ததை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த வார தொடக்கத்தில், அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாவட்ட உறுப்பினர்கள் கல்லூரி பேராசிரியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கல்லூரி முன் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவின் உத்தரவின்பேரில், சமூக நல அலுவலர் தமீமுன் நிஷா, கல்லூரி மாணவிகளிடம் தனி விசாரணை மேற்கொண்டார். நடந்த சம்பவம் உண்மை என தெரிய வர, பால் சந்திரமோகன் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்கக் கோரி, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதனடிப்படையில் ஶ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பால்சந்திர மோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைதுசெய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil