திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், இருங்ளுர் கைகாட்டி அருகில் பைக் மற்றும் காரில் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது சாலையின் நடுவில் பட்டாசுகளை வெடித்தும், சாலையை முழுவதுமாக மறித்தும் வாகனங்களை ஓட்டியும் கூச்சலிட்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் அலப்பறையில் ஈடுபட்டனர்.
இதுக்குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண்ணிற்கு 9487464651-ற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு சமயபுரம் காவல் நிலைய குற்ற எண். 192/24 ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து தக்க அறிவுரை வழங்கவும், கல்லூரி நிர்வாகத்துடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கல்லூரி நிர்வாகம் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சில மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இதுபோன்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்கள் செயல்படும் பட்சத்தில் அவர்கள் மீது காவல்துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“