திருச்சி மாநகர் கே.கே.நகர் ஆயுதபடை வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில், தொலைந்து போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கலந்து கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட 137 செல்போன்களில் 96 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்தார்.
இதில், துணை ஆணையர்கள் செல்வகுமார், விவேகானந்த சுக்லா மற்றும் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீஸ் கமிஷனர் காமினி செய்தியாளர்களிடம் கூறியதாவது; திருச்சி மாநகரில் தொலைந்து போன 137 செல்போன்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி மாநகரில் நடந்த வழிப்பறி கொலை சம்பவத்தில் 22 வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் பூட்டை உடைத்த 19 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை திருச்சி நகரில் 55 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் உள்ள 9 சோதனை சாவடிகளில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுக்களை கண்டறியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரை பொறுத்தவரை 860 கண்காணிப்பு கேமராக்கள் சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களும், வியாபாரிகளும் அந்தந்த பகுதிகளில் போலீசாருடன் ஒத்துழைப்பு நல்கி கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்த வேண்டும் என கமிஷனர் காமினி கூறினார்.
மேலும், திருச்சி மாநகர பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 34 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு கான சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“