/indian-express-tamil/media/media_files/2025/06/12/605yyph3jFbzYNSaMi0T.jpg)
Trichy
திருச்சி மாநகராட்சியில், காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் செபஸ்தியான் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி, கே.கே.நகர், இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5,920 சதுரடி உள்ள காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய விண்ணப்பித்திருந்தார். இதற்காக Zone-IV, பொன்மலை மண்டலம், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வார்டு-65க்குரிய பில் கலெக்டர் செபஸ்தியானை அணுகியபோது, அவர் ரூ.12,000/- கையூட்டாக கேட்டுள்ளார். பின்னர், சீனிவாசன் கெஞ்சியதன் பேரில், கையூட்டுத் தொகையை ரூ.10,000/- ஆக குறைத்துக்கொண்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க மனமில்லாத சீனிவாசன், நேற்று முன்தினம் 11.06.2025 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
இன்று, துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் இணைந்து ஒரு பொறிவைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின்போது, பில் கலெக்டர் செபஸ்தியான், சீனிவாசனிடமிருந்து ரூ.10,000 லஞ்சப் பணத்தை 12.06.2025 அன்று தனது அலுவலகத்தில் வைத்து பெற்றுக்கொண்டபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
பில் கலெக்டர் செபஸ்தியானை கைது செய்து சோதனை செய்தபோது, அவரிடம் கணக்கில் வராத மேலும் ரூ.24,000/- இருந்ததை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டறிந்தனர். இந்தத் தொகையை சந்தேகத்தின் பேரில் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை, இது தொடர்பாக திருச்சி பொன்மலை மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.