Advertisment

திருச்சியில் கடும் வாகன நெரிசல்: திறக்கப்படாமல் இருக்கும் மாநகராட்சி வணிக வளாகங்கள்; சமூக ஆர்வலர்கள் கேள்வி

தீபாவளி பண்டிகை காலம் துவங்கிய நிலையிலும், திருச்சியில் அவ்வப் போது மழை பெய்து வருவதாலும், பாதாள சாக்கடைக்காக மிகமுக்கிய வர்த்தக நிறுவனங்கள் இயங்கக்கூடிய பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாலும் மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.

author-image
WebDesk
New Update
Trichy Multi.jpg

தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சியில் பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் வியாபாரம், சுற்றுலா, ஆன்மிகம் எனப் பல்வேறு காரண காரணிகளுக்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் மாநகரின் முக்கிய பகுதிகளுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதுவும் தீபாவளி பண்டிகை காலம் துவங்கிவிட்டதால் மாநகர் முழுவதும் கூட்ட நெரிசல் அலைமோதுகின்றது.

Advertisment

இந்தநிலையில், திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேலரண்சாலை, சிந்தாமணி காளியம்மன் கோயில் தெரு, தெப்பக்குளம் நந்திகோயில் தெரு ஆகிய இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.

திருச்சி மாநகரில் முக்கியமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பெரிய கடைவீதி, சிங்காரத் தோப்பு, மேலரண் சாலை, மெயின்கார்டுகேட், சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி, என்.எஸ்.பி சாலை, சின்னக் கடைவீதி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான வணிக நிறுவனங்களில் வாகனம் நிறுத்துமிட வசதி இல்லை. இதனால், வாடிக்கையாளர்கள் பிரதான சாலையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதும் வாடிக்கையாகத்தான் இருக்கின்றது.   

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், மேலரண் சாலையில் தமிழ்ச் சங்க கட்டிடத்துக்கு எதிரில் சிட்டி கிளப் இருந்த இடத்தில் சுமார் ரூ.19.70 கோடி மதிப்பில் வணிக வளாகத்துடன் கூடிய பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி கடந்த 2019 ஜூலை மாதம் தொடங்கி 2023 ஜூலை மாதம் முடிவடைந்தன. இதில் தரைத் தளத்தில் 4,678 சதுர அடியில் 23 கடைகள், 1,278 சதுர அடியில் ஒரு உணவகம், 860 சதுர அடியில் காபி ஷாப் ஆகியவை அமைய உள்ளன.

இது தவிர தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 7,780 சதுர அடியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 2 மற்றும் 3-ம் தளங்களில் தலா 23,120 சதுர அடியில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் கட்டப்பட்டுள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 150 கார்கள், 550 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். 

இதே போல, சிந்தாமணி போலீஸ் குடியிருப்பு அருகில் காளியம்மன் கோயில் தெருவில் காய்கறி சந்தையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. இதில் 1,202 சதுர அடியில் 17 நிரந்தரக் கடைகளும், 964 சதுர அடியில் 32 தரைக்கடைகளும், முதல் மற்றும் 2-ம் தளத்தில் தலா 7,260 சதுர அடியில் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமும் கட்டப்பட்டுள்ளது. இவற்றில் 50 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.

இது தவிர, நந்திகோயில் தெரு பகுதியில் ரூ.98 லட்சம் மதிப்பில் தரை தளத்தில் 66 சிறு கடைகளுடனும், முதல் தளத்தில் 150 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடம் 2021-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கி 2022 மார்ச்சில் நிறைவடைந்தன. இந்த வாகன நிறுத்துமிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாததாலும், மாநகரில் தற்போது பாதாள சாக்கடைப்பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாலும் பெரும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகின்றது.

பலகோடி மதிப்பிலான பல்வேறு கட்டுமானங்களின் கட்டுமானப்பணிகள் நிறைவுற்றும் இதுவரை எதுவுமே திறக்கப்படாதது ஏன் எனத் தெரியவில்லை. தற்போது மழைக் காலமும், தீபாவளி பண்டிகைக் காலமும் துவங்கியிருப்பதால் கடைத் தெருக்களுக்கு துணிகள் எடுக்கவும், பொருட்கள் வாங்கவும் வரும் பொதுமக்கள் தத்தம் வாகனங்களை பிரதான சாலைகளின் ஓரங்களிலேயே விட்டுச் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சாலைப் பயனீட்டாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன் தெரிவிக்கையில், தீபாவளி பண்டிகை காலம் துவங்கிய நிலையிலும், திருச்சியில் அவ்வப் போது மழை பெய்து வருவதாலும், பாதாள சாக்கடைக்காக திருச்சியின் மிகமுக்கிய வர்த்தக நிறுவங்கள் இயங்கக்கூடிய பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாலும் மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகின்றது.

பள்ளி-கல்லூரிகளில் இருந்து வீடு திரும்புவோர், வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவோர் சரியான நேரத்திற்கு வீடு திரும்ப இயலவில்லை. திருச்சி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி விருதுகள் கொடுக்கப்பட்டது. அந்த விருதுகள் எதை வைத்து கொடுக்கப்பட்டது என்பது புரியாத புதிர் தான். 

மாநகர் முழுவதுமே, ஏன் மாநகராட்சி தலைமை அலுவலகம் இயங்கக்கூடிய பகுதியில் உள்ள பிரதான சாலை கூட குண்டும் குழியுமாக இருப்பதை நாம் காண முடிகின்றது. இந்த நிலையில் எதன் அடிப்படையில் திருச்சி மாநகராட்சி சிறந்த மாநகராட்சிக்கான விருதினை பெற்றது எனத் தெரியவில்லை. 

Trichy 5.jpg

மேலும், மாநகராட்சி பகுதிகளில் அரசு இடங்களில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வணிக வளாகங்கள், கார் பார்க்கிங்குகள் ஏன் இன்னும் திறக்கப்படாமல் இருக்கின்றன எனத் தெரியவில்லை. யாருடைய அனுமதிக்காக காத்திருக்கின்றனர் என்றும் புரியவில்லை. தீபாவளி நேரம் என்பதால் மாநகரில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் கார் பார்க்கிங் உள்ளிட்ட வணிக வளாகங்களை மாநகராட்சி நிர்வாகம் இப்போதே திறந்து விட்டால் மாநகராட்சிக்கான வருவாயும் கூடும். 

ஆகையினால் யாருக்காகவும் காத்திருக்காமல் பொதுமக்களின் நலன் கருதி வாகன நிறுத்துமிடங்களை மட்டுமாவது விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார். மாநகராட்சியில் கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்களாகவே திறக்கப்படாமல் இருக்கும் வணிக நிறுவனங்கள் குறித்து வணிக பிரமுகர்களிடம் கேட்டபோது, மாநகராட்சி வணிக வளாகங்களில் கட்டப்பட்டுள்ள கடைகளை ஒதுக்கீடு செய்வதில் அரசியல் பின்னணி மற்றும் வாடகை நிர்ணயம் செய்வது, ஏலம் விடுவது போன்ற நடைமுறைகளில் சில பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும், சில பெரும் வணிகர்கள் மாநகராட்சி கட்டி வைத்திருக்கும் கடைகளுக்கான வாடகையை உயர்த்தி விட்டு அவர்கள் ஒதுங்கிக்கொள்கின்றனர். இதனால் சாதாரண மக்கள் கடை வைக்க நினைத்து மாநகராட்சி நிர்வாகத்திடம் சென்றால் வாடகையை கேட்டவுடனே மயக்கம் வந்து விடுகின்றது. இதனாலேயே பல கடைகள் இன்னும் மாநகராட்சியால் வாடகைக்கு விடப்படாமலேயே வீணாகிக்கொண்டிருக்கின்றன. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மாநகராட்சி விரைந்து செயல்பட்டு வணிக வளாகங்களை திறந்து விட்டு பொதுமக்களின் சிரமத்தை குறைக்க வேண்டும் என்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment