/indian-express-tamil/media/media_files/2025/04/11/YtPT4WBDFQcpxV9vizok.jpeg)
திருச்சி மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மாநகர மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (ஏப்ரல் 11) மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், திருச்சி பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை தனியாரிடம் ஒப்படைப்பது, வரும் மே 9 ஆம் தேதிக்குள்ளாக மாநகரில் சாத்திய கூறுகளை கண்டறிந்து, 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க தடையில்லா சான்றை வழங்குவது உள்ளிட்ட 40 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. இது குறித்த விபரம் வருமாறு;
திருச்சி மாநகராட்சியின் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வருகின்ற மே ஒன்பதாம் தேதி தமிழக முதல்வர் திருச்சி பஞ்சப்பூரில் அமைந்துள்ள மாநகரின் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைக்க உள்ளார். இதனையொட்டி முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் எனபன உள்ளிட்ட 40 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சுமார் 15 ஆண்டு காலத்திற்கு பராமரிப்பு பணியினை மேற்கொள்ளவும், பேருந்து முனையத்தை முறையாக இயக்கவும் நகராட்சி நிர்வாக இயக்குனரின் நிர்வாக அனுமதி பெறுவதற்கு கருத்துரு அனுப்பி வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் முதல்வர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 50,000 மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதையொட்டி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வார்டுகளில் எந்தெந்த பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன என்பதை கண்டறிந்து, அதற்கான தடையில்லா சான்றை வழங்குவதற்கு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து, நடைபாதை விற்பனையை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், நகர விற்பனை குழுவில் இடம்பெற உள்ள ஆறு உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற மே மாதம் 12ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி நிறைவடைகிறது. 20ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசலனை செய்யப்பட்டு, 21ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். 22ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிஷப் ஷீபர் மேல்நிலைப் பள்ளியில் இத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. மாலை 6:00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு கலைஞரின் பெயரையும், லாரி முனையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும், அதன் அருகே அமையவுள்ள சந்தைக்கு தந்தை பெரியார் பெயரையும் வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்தினரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகள் மூலம், ஏலம் மற்றும் அபராத தொகையாக 23 லட்சத்து 22 ஆயிரம் 500 வருமானம் கிடைத்துள்ளது என்ற விபரம் வெளியிடப்பட்டது. மேலும், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதை அதிகரிப்பது உள்ளிட்ட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையர் க.பாலு, துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில், நகர் நல அலுவலர், மண்டலத் தலைவர்கள், செயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திருச்சி வந்த அமைச்சர் கே.என் நேரு பஞ்சப்பூர் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், நேரடியாக புதிய பேருந்து நிலைய பகுதிக்குச் சென்று பணிகளை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.