க.சண்முகவடிவேல்
Trichy: திருச்சி நீதிமன்றம் அருகே மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு 100-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கும் அம்சவல்லி மற்றும் பள்ளி ஊழியர்கள் நேற்று புதன்கிழமை மாலை வழக்கம்போல் பள்ளியை பூட்டி விட்டு வீடு சென்றனர்.
இந்த நிலையில், இன்று காலை வழக்கமாக பள்ளியை திறக்க வாட்ச்மேன் வந்து பார்த்தபோது பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தார். இதன் பின்னர், தலைமை ஆசிரியை பள்ளிக்கு வந்து உள்ளே சென்று பார்த்தபோது, தலைமை ஆசிரியை அறையில் பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தது.
பீரோவில் இருந்த ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிறுவர் சிறுமியரின் விளையாட்டு பொருட்கள், மின் விசிறிகள் திருடப்பட்டு இருந்தன. நூலகத்திலும் பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து தலைமை ஆசிரியை அம்சவல்லி திருச்சி அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விரைந்து வந்து தீவிர விசாரனை நடத்தி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
பள்ளியின் வாசலில் இரவு நேரங்களில் சில சமூக விரோத கும்பல்கள் அங்கே அமர்வதும், மது அருந்துவதும் அவ்வப்போது நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து ஏற்கனவே பள்ளி சார்பிலும், அப்பகுதியினர் சார்பிலும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில், இன்று பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“