/indian-express-tamil/media/media_files/2025/05/06/oRfT88W9qEFr6TFYtGm0.jpg)
திருச்சி மாநகராட்சி அவசரக் கூட்டம்; மீண்டும் இடம் மாறும் சிவாஜி சிலை: ஸ்டாலின் திறந்து வைப்பாரா?
திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், துணை மேயர் திவ்யா, துணை ஆணையர் பாலு ஆகியோர் முன்னிலையில் (மே 6) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சிவாஜி சிலை திறப்பு குறித்து பேசப்பட்டது. மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு 2009-ம் ஆண்டு பாலக் கரை பிரபாத் ரவுண்டானாவில் 9 அடி உயர முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் சிலை திறப்பு விழா தள்ளிப்போனது. இதற்கிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், சிலை திறப்பு விழா கிடப்பில் போடப்பட்டு, சிலை துணி கொண்டு மூடப்பட்டது.
சிவாஜி சிலையை திறக்கக்கோரி அவரது ரசிகர்கள், காங்கிரஸ் கட்சியினர் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாலக்கரை ரவுண்டானாவில் சிலை அமைக்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை என காரணம் கூறப்பட்டது.
இதனிடையே சட்டப்பேரவையில் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், சிவாஜி சிலை திறப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, “வேறு இடத்தில் பூங்காவில் சிவாஜி சிலை நிறுவப்பட்டு திறக்கப்படும்” என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார். தொடர்ந்து பாலக்கரை ரவுண்டானாவிலிருந்த சிலை பெயர்த்து எடுக்கப்பட்டு, சோனா - மீனா திரையரங்கம் எதிரே வார்னர்ஸ் சாலையில் உள்ள மினிபூங்காவில் சிலையை நிறுவும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக, திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஏப்.29ம் தேதி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அரசு புறம்போக்கு, பொது இடங்களில் சிலைகள், கட்சிக் கொடிக் கம்பங்களை நிறுவக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு சிலை நிறுவும் திட்டம் கைவிடப்பட்டு, நேற்று முன்தினம் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, சிவாஜி சிலையை நிறுவுவதற்கு தனியார் இடத்தை தேர்வு செய்யும் பணியில் மாநகராட்சி மேயரும், தி.மு.க. மேற்கு மாநகரச் செயலாளருமான அன்பழகன் ஈடுபட்டார். இதில், திருச்சி அரசு மருத்துவமனை அருகில் வயலூர் சாலை பிரியும் இடத்தில் சாலையில், மறைந்த குமாரசாமி என்பவருக்குச் சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, அந்த இடத்தை ஜாபர்ஷா தெருவில் வசிக்கும் குமாரசாமியின் மனைவி மற்றும் மகள்கள், மேற்கு மாநகர திமுக பெயரில் நேற்று தானசெட்டில்மென்ட் எழுதிக்கொடுத்தனர். இதனை அடுத்து திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்தை மேயர் அன்பழகன் இன்று கூட்டினார்.
மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிலை திறப்பு குறித்து மேயர் அன்பழகன் பேசியபோது;
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் வைக்கப்பட்ட சிவாஜி முழு உருவ சிலை அகற்றி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா மீனா திரையரங்கு எதிரே வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் 8, 9 ம் தேதிகளில் திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
அப்போது, அவர் சிவாஜி சிலையை திறந்து வைப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே பிரபாத் ரவுண்டானாவில் வைக்கப்பட்டபோது அந்த சிலையை திறப்பதற்கு நீதிமன்றத்தில் தடையாணை வாங்கப்பட்டது. 2009-ல் அப்போதைய போக்குவரத்துறை அமைச்சர் நேரு, சிவாஜி சிலை வைக்கும் பணியை மேற்கொண்டார். ஆனால், திறக்க முடியவில்லை.
தற்பொழுது அந்த சிலை சோனா மீனா திரையரங்கு எதிரே வைக்கப்பட்ட போது அது மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் மீண்டும் அரசு புறம்போக்கு இடத்தில் வைக்கக்கூடாது என்று எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, திருச்சி வயலூர் சாலையில் (அரசு மருத்துவமனை) புத்தூர் அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சிவாஜி சிலை நிறுவுவதற்கு ஒருவர் இடத்தை தானமாக கொடுத்துள்ளார். அங்கே சிலை வைக்கப்படும் அதற்காக சிறப்பு தீர்மானம் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது என மேயர் அன்பழகன் தெரிவித்தார்.
இதனை மாமன்ற உறுப்பினர்களும் வரவேற்று தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர். 14 ஆண்டுகளாக திறப்பு விழா காணாமல் உள்ள சிவாஜி சிலை மீண்டும் இடம் மாற்றம் செய்யப்பட்டு, புத்தூர் அரசு மருத்துவமனை அருகில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. அதே நேரம், நாளை மறுதினம் முதல்வர் வருவதற்குள் சிலை நிறுவப்பட்டு பணிகள் முடியுமா என்று கேள்வியுடன் சிவாஜி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.