இந்தியா முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) 77-வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பல்வேறு துறை சார்ந்த விருதுகள் வழங்கப்பட்டு கொளரவிக்கப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் கல்வி, காவல்துறை, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன,
அந்த வகையில், சிறந்த மாநகராட்சியாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விருதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்க உள்ளார்.
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் விருதினை பெற உள்ளனர். சாலைகள் அமைப்பது, குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்குவது, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தமிழகத்திலேயே திருச்சி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/