திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பொன்மலைப்பட்டி பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மாநகராட்சி நிர்வாகமே குப்பைகளை சாலையிலும், பள்ளி மைதானத்திலும் கொட்டிச் செல்வது சுற்றுச்சூழல் மாசு, சுகாதாரக் கேடுக்கு வழி வகுப்பதாக சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் கே. சி. நீலமேகம் கூறுகையில், “திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலைப்பட்டி புறநகர் மற்றும் சுற்றுப்புறங்களில் சட்டத்திற்கு புறம்பாக குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர்.
அதேபோல் பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் மர்ம நபர்கள் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் இடமாக மாற்றியுள்ளனர். இங்கு பல பாரம்பரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளும் உள்ளது. புதிய கட்டமைப்புகள் வருவதால், கட்டடம் கட்டுபவர்கள் குப்பைகளை காலி இடத்தில் வீசி வருகின்றனர்.

புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகே பல லாரிகளில் உடைந்த செங்கற்களை தூக்கி வந்து கொட்டுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம், அதை தடுத்து இருக்கிறோம். சில இடங்களில், குப்பைகளை எரிப்பதற்கு முன் சேகரிக்க அனுமதிக்கப்படுகிறது. “அனுமதிக்கப்பட்ட அந்த இடங்களில் பயோ மெட்டீரியல்களுடன் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்பட்டு சுகாதாரக் கேடுக்கு வழி வகுக்கிறது. தூய்மை மாநகரம் என்ற அந்தஸ்தை பெறுவதற்காக பல்வேறு களப்பணிகளை கையாளும் மாநகராட்சி நிர்வாகமே பள்ளி வளாக மைதானம், குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை கொட்டுவது கண்டிக்கத்தக்கது” எனக் கூறினார்.

இது குறித்து, திருச்சி மாநகராட்சியின் துப்புரவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பொன்மலைப்பட்டியில் கடந்த 6 மாதங்களில் 80% குப்பை கொட்டுவது குறைந்துள்ளது. பலர் தங்கள் வாகனங்களில் சென்று தங்கள் வீட்டுக் கழிவுகளை கொட்டி வருகின்றனர். மேலும், இந்த மண்டலத்தில் கொட்டப்படுவது ஒரு கட்டத்தில் 10 டன் வரை உயர்ந்துள்ளது. சீரற்ற குப்பைகளை அகற்றுவதைத் தடுக்க ஆறு மாதங்களுக்கு முன்பு வீடு வீடாக சென்று சேகரிப்பு அட்டவணையை கடுமையாக்கினோம்.
அதே நேரம் 15 ஆயிரம் பேர் பணியாற்றிய பொன்மலை பணிமனையில் தற்போது ஆட்குறைப்பின் காரணத்தால் சுமார் 6000 பேர் பணியில் இருக்கின்றனர். பல பணியாளர் குடியிருப்புகளில் ஆளில்லாமல் இருப்பதால், பொன்மலைப்பட்டியில் உள்ள வீட்டு கட்டடங்கள் செடிகள் வளர்ந்து கிட்டத்தட்ட இருட்டடிப்பு ஆகிவிட்டன. இதுவும் சட்டவிரோதமாக குப்பை கொட்டுவதை ஊக்குவித்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குப்பைகளை அகற்றும் நேரத்தை அதிகரிப்பதுடன், மக்கள் குப்பைகளை வீசும் இடங்களையும் கண்காணித்து வருகிறோம். தோட்டக் கழிவுகளை லாரி மூலம் அகற்றுகிறோம். இருப்பினும், கட்டுமான குப்பைகள் இன்னும் ஒரு பிரச்சனையாகவே உள்ளது. பொன்மலைப்பட்டியில் கழிவுகள் கொட்டப்படும் தொலைதூர பகுதிகளில் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்துவது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்