திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெரியார், அண்ணா பிறந்த நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட நீதிபதி தடை விதித்த நிலையில், தடையை மீறி விழா நடத்துவோம் பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திருச்சிராப்பள்ளி வழக்குறிஞர்கள் சங்கம் சார்பில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.
அந்தவகையில், இந்த ஆண்டும் திருச்சி நீதிமன்றத்தில் பெரியார், அண்ணா பிறந்த நாள் நடத்துவதற்கு, நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் பா.ஜ.க. வை சேர்ந்த வழக்கறிஞர் சன் மாரியப்பன் என்பவர் இந்த விழா நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டுமென்று மாவட்ட நீதிபதி பாபுவிடம் முறையிட்டிருந்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென அனுமதி மறுக்கப்படுகிறது என திருச்சி மாவட்ட நீதிபதி பாபு உத்தரவிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் பொதுக்குழு கூட்டம் பார் கவுன்சில் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வழக்குரைஞர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன், பொருளாளர் சசிக்குமார், துணை தலைவர் சிவக்குமார், இணைச் செயலாளர் நவநீத கிருஷ்ணன், கங்கை செல்வன், வீரபாண்டியன், கார்ல் விக்டர் வீராசாமி, கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் திருச்சி நீதிமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் வரும் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழாவினை தொடர்ந்து நடத்தப்படும் என்றும் தடை விதித்ததால் தடையை மீறி நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த தடையை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தப்படும் என திருச்சி திராவிடர் கழகத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“