scorecardresearch

திருச்சி காவல் நிலைய தாக்குதல்; மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 5 தி.மு.க பிரமுகர்களுக்கு நிபந்தனை ஜாமின்

திருச்சி காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட தி.மு.க பிரமுகர்கள் 5 பேருக்கு நிபந்தனை ஜாமின்

Trichy DMK
திருச்சி காவல் நிலையத்தில் தாக்குதல்; தி.மு.க பிரமுகர்கள் 5 பேருக்கு நிபந்தனை ஜாமின்

திருச்சி கண்டோன்மென்ட் எஸ்.பி.ஐ காலனி பகுதியில் கடந்த 15 ஆம் தேதி நவீன இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அருகே சிவா எம்.பி வீடு உள்ளது. அங்கு திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர் நேருவிற்கு எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியும், எம்.பி வீட்டில் உள்ள நிறுத்தப்பட்டிருந்த கார் இருசக்கர வாகன மற்றும் நாற்காலிகளை அடித்தும் நொறுக்கினர். இதனை தொடர்ந்து கருப்புக்கொடி காட்டிய பத்துக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் பிடித்து திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையும் படியுங்கள்: ஆன்லைன் ரம்மியில் ரூ.5 லட்சம் இழந்த இளைஞர்.. திருச்சியில் மேலும் ஒருவர் பலி

அப்பொழுது காவல் நிலையத்திற்குள் புகுந்து எம்.பி ஆதரவாளர்களை அமைச்சரின் ஆதரவாளர்கள் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினரும், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளரும் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான முத்து செல்வம், மாவட்ட பொருளாளர் துரைராஜ், 55 ஆவது வட்ட செயலாளர் ராமதாஸ் மற்றும் பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகியோர் தாக்கினர்.

இந்த தாக்குதல் சம்பவம் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து தாக்குதலில் நடத்திய அமைச்சரின் ஆதரவாளர்கள் ஐந்து பேரையும் தி.மு.க.,வில் இருந்து நீக்குவதாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார் துரைமுருகன். அன்று காலையில் நடைபெற்ற சம்பவத்தினை அடுத்து மாலையில் மேற்கண்ட தி.மு.க பிரமுகர்கள் ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினரும், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காஜாமலை விஜய், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளரும் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான முத்து செல்வம், முன்னாள் மாவட்ட பொருளாளர் துரைராஜ், 55 ஆவது முன்னாள் வட்ட செயலாளர் ராமதாஸ் மற்றும் முன்னாள் பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகிய ஐந்து பேருக்கும் ஜாமின் மனு கடந்த (20.03.2023) திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி பாலாஜி மனுவை தள்ளுபடி செய்தார். இதை தொடர்ந்து 2-வது முறையாக (23.03.2023) அன்று மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கடந்த 24 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி மனுவை நிராகரித்தார். 

இதன் தொடர்ச்சியாக இன்று திருச்சி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பாபுவிடம் மேற்கண்ட 5 பேருக்கான ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி 5 பேருக்கும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட 5 பேரும் மறு உத்தரவு வரும் வரை மதுரை மாவட்டம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy court gives bail to dmk functionaries who involves police station attack