யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் போலீஸாரை சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியதாக முசிறி டி.எஸ்.பி யாஸ்மின், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் அளித்த புகாரின் பேரில், சங்கர் மீதும், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டெல்லியில் இருந்த பெலிக்ஸை கைது செய்த திருச்சி தனிப்படை போலீஸார் மே 13-ம் தேதி திருச்சி அழைத்து வந்தனர். பின்னர், திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மே 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில், பெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, பெலிக்ஸ் ஜெரால்டுவை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதிக்க கோரி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
/indian-express-tamil/media/post_attachments/51867a55-03b.jpg)
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.
அதன்படி, இன்று மாலை 3 மணி முதல் அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் போலீஸார் விசாரணைக்கு பிறகு நாளை மாலை 3 மணிக்கு அவரை மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகின்றனர். போலீஸ் விசாரணைக்கு செல்வதையொட்டி பெலிக்ஸுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று மாலை தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் சைபர் கிரைம் போலீசார் பெலிக்ஸ்சை அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து பெலிக்ஸ் வழக்கறிஞர் கென்னடி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்; காவல்துறை சார்பில் 7 நாள் கஸ்டடி கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர், இதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். இந்த சூழலில் நீதிமன்றம் ஒரு நாள் மட்டுமே அனுமதித்துள்ளது. நாங்கள் அதற்கு ஒத்துழைக்கிறோம் என கூறியுள்ளோம். மேலும் மூன்று முறை வழக்கறிஞர் அவரை சந்திக்கலாம் எனவும் அனுமதி வழங்கி உள்ளனர்.
வழக்குக்கு சம்பந்தமில்லாமல் வீட்டிற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை எடுத்துச் செல்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்று நீதிபதி கேள்வியை முன் வைத்தார். மேலும் அவரது செல்போனை 13ம் தேதி ஒப்படைக்க வேண்டும். ஆனால் ஒப்படைக்கவில்லை, இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தோம். இதனை அடுத்து பெலிக்ஸ் செல்போனை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
குற்றத்திற்கான நடவடிக்கை பதிலாக குடும்பத்துடைய ஒட்டுமொத்த வருமானத்தையே காலி பண்ணுவதற்கான வேலையை செய்கிறார்கள். இது சட்டத்துக்கு முரணான விஷயம் என பதிவு செய்துள்ளோம். அதற்கு மனு தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இன்று ஜாமீன் கேட்டிருந்தோம், ஆனால், காவல்துறையினர் கஸ்டடி மனு தாக்கல் செய்திருப்பதால் சண்டை வேண்டாம் என்று விட்டு விட்டோம். காவல்துறை அதிகார பலம் என்பது மிக மோசமான அதிகார பலம். சட்டத்திற்கு முரணான பலத்தை வைத்துள்ளனர். அதன் மீது தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறார்கள். நாங்கள் சட்டப்படியான நடவடிக்கை எடுங்கள் என்று தான் சொல்கிறோம் என தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“