திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த வருண்குமார்,(தற்போது திருச்சி சரக டிஐஜி) குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தனிப்பட்ட புகாரை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "சீமான் என்னையும், எனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியும், தனிப்பட்ட விதத்தில் மிரட்டியும் வருகிறார்.
இதனால் நான் உள்பட எனது குடும்பத்தினர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம். இவ்வாறு அவதூறு தகவல்களை பேசி வரும் சீமான் ரூ. 2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும். அவர் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக வரும் 30-ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் எஸ்.பி வருண் குமார் நேரில் ஆஜராகி தமது வாக்குமூலத்தை பதிவிட உத்தரவிடப்பட்டது. அதன்படி திருச்சி டி. ஐ. ஜி . வருண்குமார் கடந்த 30-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி தமது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
டி.ஐ.ஜி வருண்குமார் வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி பாலாஜி அனைத்தையும் எழுத்து மூலமாகவும், புகார் குறித்த சான்றுகளை நீதிமன்றத்தில் பதிவு செய்தார். பின்னர் இது தொடர்பான வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில், வரும் பிப்ரவரி 19-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் 4-ல் நேரில் ஆஜராக திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலாஜி உத்தரவு பிறப்பித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்