பெலிக்ஸ் ஜெரால்டின் யூடியூப் (youtube) சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டியின் போது (பெண்) காவலர்களை தரக்குறைவாக பேசியதாக அவர் மீது முசிறி டி.எஸ்.பி எம்.ஏ.யாஸ்மின் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் இரண்டாவது குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் சவுக்குசங்கரின் அந்த நேர்காணலை ஒளிபரப்பு செய்த ரெட்பிக்ஸ் (redpix) ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் டெல்லியில் 10ம் தேதி இரவு பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர்.
ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது திருச்சி கணினிசார் குற்றப்பிரிவு தாக்கல் செய்த வழக்கில் நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டுள்ளார். ஆறு மாதத்திற்கு திருச்சி கணினி சார் குற்றப்பிரிவில் பிரதி மாதம் 2 முறை, அதாவது ஒன்றாம் தேதியும், 15- ஆம் தேதியும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
ஜெரால்டு மீது திருச்சியில் பதியப்பட்ட வழக்குக்கு இன்று ஜாமின் கிடைக்கப்பெற்ற நிலையில், கோவையில் பதியப்பட்ட வழக்குகளுக்கு விசாரணை தொடர்கிறது. ஏற்கனவே ஆறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“