திருச்சியில் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் ஆளுநர் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்டவர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார். இந்தநிலையில், ஆளுநர் திருச்சி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாட்டிற்கு எதிராகவும், தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாகவும், ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திருவானைக்கோவிலில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் இன்று (பிப்.10) காலை நடைபெற்றது.
இந்த கருப்புக் கொடி போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், ரேணுகா, பா.லெனின், கார்த்திக், மணிமாறன் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, அபிசேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி, பாலக்கரை பகுதி செயலாளரும், திருச்சி மாநகராட்சி உறுப்பினருமான சுரேஷ், பொன்மலை பகுதி செயலாளர் விஜேந்திரன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் சூர்யா, மாவட்ட செயலாளர் மோகன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி, மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆளுநர் ரவிக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“