திருச்சி பொன்மலை அருகே கடன் சுமையால் இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:
ஜோசப்பின் மகனான அலெக்ஸ் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் ஆராதனா மற்றும் ஆலியா படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்தும் கிடந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொன்மலை உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அலெக்ஸ் ஜவுளி வியாபாரம் செய்து வந்ததாகவும், அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், ரயில்வே ஊழியரான விக்டோரியாவின் தாயாருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காகவும், தனது தம்பிக்கு தொழில் செய்வதற்காகவும் அலெக்ஸ் கடன் வாங்கியுள்ளார். இந்த கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் அவர் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மேல கல்கண்டார் கோட்டை மகாலட்சுமி நகரில் புதிய வீடு கட்டிய அலெக்ஸ் அதற்கான மாதத் தவணை தொகையை விக்டோரியாவின் தாயாரின் பென்ஷன் பணத்தில் இருந்து செலுத்தி வந்துள்ளார். சமீபத்தில் விக்டோரியாவின் தாயார் இறந்ததால் பென்ஷன் பணம் கிடைக்காத நிலையில், வீட்டுக் கடனையும் கட்ட முடியாமல் கடன் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அலெக்ஸ் மற்றும் விக்டோரியா ஆகியோர் தங்கள் இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் தாங்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.