திருச்சி முன்னாள் எஸ்.பி.,யும் தற்போதைய டி.ஐ.ஜி.,யுமான வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பேசுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வருண்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வருண்குமார் ஐ.பி.எஸ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் துரைமுருகன் அடைக்கப்பட்டார். அங்கு தன்னை சித்திரவதை செய்ததாக துரைமுருகன் புகார் கூறியிருந்தார்.
மேலும், அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த சில ஆடியோக்கள் 'லீக்' ஆனது. துரைமுருகனுடன் பேசிய சீமான், கட்சியின் நிர்வாகிகளான காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் உள்ளிட்ட மூத்த முக்கிய நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசியதாக சில ஆடியோக்கள் வெளியானது. அதனை சீமானும் மறுக்கவில்லை.
அதே நேரத்தில் திருச்சி எஸ்.பி.,யாக இருந்த வருண்குமார் ஐ.பி.எஸ், சாட்டை துரைமுருகனின் செல்போன்களில் இருந்த ஆடியோக்களை எடுத்து கசிய விட்டதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி எஸ்.பி.,யாக இருந்த வருண்குமார், நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், சீமான் புகார் கூறியிருந்தார்.
மேலும், குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்.பி வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்.பி.,யும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சிலர் எக்ஸ் கணக்குகளில், ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தரக்குறைவாக விமர்சிப்பதால் எக்ஸ் தளத்திலிருந்து தானும் தனது மனைவியும் விலகுவதாக அறிவித்தார் வருண்குமார். மேலும், தன்னையும் தனது மனைவி மற்றும் குழந்தைகள் குடும்பத்தினர் என அனைவரையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சுமார் 50 பேரின் பட்டியலை பகிர்ந்த வருண்குமார் இது தொடர்பாக யாரையும் விடப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் சமூக வலைதளத்தில் பேசும் இணையதள கூலிப்படையினர் மற்றும் அவர்களை தூண்டிவிடும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வருண்குமாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே தன் மீது 130க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில் அதனை 200 வழக்குகளாக மாற்ற வேண்டாம். எத்தனை நோட்டீஸ் அனுப்பினாலும் தான் அதை குப்பை தொட்டியில் தான் வீசுவேன் என தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து வருண்குமார் ஐ.பி.எஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார். ஆனால், தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் "சீமான் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியும் தனிப்பட்ட விதத்தில் மிரட்டுவதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே சீமான் தனக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும் .அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புகார் தொடர்பாக 30ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
இதற்கிடையே வருண்குமார் ஐ.பி.எஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகியோரை டிஐஜியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். தனிப்பட்ட வழக்கு என்பதால் வருண்குமார், காவல் சீருடையில் இல்லாமல், சாதாரண உடையிலேயே நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.