க. சண்முகவடிவேல்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் பலத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்ததாவது:- “கடந்த ஆண்டு பெய்த அதிகப்படியான மழையால் அழிந்து விட்ட நெற்பயிர்களுக்கும், மற்ற பயிர்களுக்கும் இதுவரை கிடைக்காத பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க வேண்டும். ஆறு வாய்க்கால், ஏரிகளில் சாக்கடை நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு துறையின் கீழ் உள்ள கூட்டுறவு வங்கியின் தலைவர்கள் சிலர் விவசாயிகளுக்கு கட்சி பாகுபாடு பார்த்து கடன் தர மறுக்கிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை அதிகாரிகளிடம் கொடுக்க வந்தோம். ஆனால் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் யாரும் வராததால் நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு” என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil