திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை (ஜன.13) சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர் பொதுமக்களுடன் பொங்கல் வைத்து, பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்ந்தார்.
இந்நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான மாட்டு வண்டியை ஓட்டி மாவட்ட ஆட்சியர் அசத்தினார். ஆட்சியர் மாட்டு வண்டி ஓட்டியதை கண்டு வியந்த பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
-
குதிரை வண்டி ஓட்டிய அசத்திய மாவட்ட ஆட்சியர்
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதாரணி, மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா, மணிகண்டம் ஒன்றிய திமுக செயலாளர் மாத்தூர் கருப்பையா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட வளர்ச்சி வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து துறை ஊழியர்களும் ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடந்து பூஜை செய்யப்பட்டு சக்கரை மற்றும் வெண் பொங்கல் வைக்கப்பட்டது.
பின்னர் அரசு ஊழியர்களுக்கு லெமன் வித் ஸ்பூன், மியூசிக்கல் பால் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து குதிரை வண்டியை மாவட்ட ஆட்சியர் ஓட்டி சென்றார்.
மேலும் தனது இரு மகன்களை அழைத்து குதிரை வண்டியில் அமர்த்தி மாவட்ட ஆட்சியர் வளாகத்தை சுற்றி மாவட்ட ஆட்சியர் ஓட்டி வந்தார். மேலும் சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட ஜல்லிக்கட்டு காளையுடன் அரசு ஊழியர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டு உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/