தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 01.01.2023-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் செய்யப்பட்டது.
2023-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,04,89,866, பெண் வாக்காளர்கள் 3,15,43,286 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர்) வாக்காளர்களாக இருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்: பெயர் சேர்க்க- நீக்க ஆன்லைனில் வசதி
அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர் மற்றும் துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஆட்சியர் பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 10413 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 11 லட்சத்து 20158 பேரும், பெண்கள் 11 லட்சத்து 89 ஆயிரத்து 933 பேரும் உள்ளனர். மேலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2544. அதிகமான வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக ஸ்ரீரங்கம் 3,01,659, குறைவான வாக்காளர் கொண்ட தொகுதியாக லால்குடி 2,18,971 உள்ளன. புதிதாக 43,423 வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 34,288 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் 9 சட்டமன்ற தொகுதியில் 1376 உள்ளனர் எனத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்தியநாதன், வருவாய் அலுவலர் அபிராமி மற்றும் அனைத்து கட்சியின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
இந்த வாக்காளர் சுருக்க முறை திருத்தத்தின்படி இந்த முறை தமிழகம் முழுவதும் பெண் வாக்காளர்களே அதிக பங்களிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil