Advertisment

போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலுக்கு ஏஜெண்ட்: திருச்சியில் தி.மு.க பிரமுகர் கைது

அகில இந்திய சித்த மருத்துவ சங்க மாநில தலைவராக உள்ள திருச்சியைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன் (60) என்பவர், போலி சான்றிதழ் தயாரித்த கும்பலுக்கு ஏஜெண்டு போல் செயல்பட்டது தெரியவந்தது.

author-image
WebDesk
New Update
Subbah

போலி மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கிய விவகாரத்தில் அகில இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பையா பாண்டியன் சிபிசிஐடி போலீசாரால் திருச்சியில் கைது செய்யப்பட்டு கடலூர் அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisment

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தில் வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் 19-ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக சான்றிதழ்கள் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், சான்றிதழ்களை பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர். அதில், சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்துள்ளது.

இது குறித்து அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் பிரபாகரன் கிள்ளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிதம்பரம் மன்மதசாமி நகரைச் சேர்ந்த சங்கர், நாகப்பன், அருட்பிரகாசம் ஆகிய 3 பேரும், போலி சான்றிதழ்கள் தயாரித்தது தெரியவந்தது.

publive-image

மேலும், இந்தியாவில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களின் பெயரில் ஆயிரக்கணக்கான சான்றிதழ்கள் போலியாக தயாரித்து கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களது வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், அங்கிருந்த ஏராளமான பெயர் எழுதப்படாத சான்றிதழ்கள், அதை தயாரிக்கப் பயன்படுத்திய லேப்டாப், பிரிண்டர், போலி முத்திரை, போலி அடையாள அட்டைகள், செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த ஆவணங்களை ஆய்வு செய்த கடலூர் மாவட்ட சிபிசிஐடி பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், அகில இந்திய சித்த மருத்துவ சங்க மாநில தலைவராக உள்ள திருச்சியைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன் (60) என்பவர், போலி சான்றிதழ் தயாரித்த கும்பலுக்கு ஏஜெண்டு போல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து திருச்சி குறிஞ்சி நகரில் உள்ள சுப்பையா பாண்டியன் வீட்டில் போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது, சுப்பையா பாண்டியன், அவரது மனைவி பெயரிலும் போலி சான்றிதழ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரது வீட்டில் 10க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் இருந்தது.

publive-image

இதனையடுத்து சுப்பையா பாண்டியனை கைது செய்த சிபிசிஐடி போலீசார், கடலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் போலி சான்றிதழ்கள் மூலம் ஏராளமானோர் சித்த மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சித்த மருத்துவம் பார்த்து வந்த 100க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாரம்பரிய சித்த வைத்தியரான சுப்பையா பாண்டியன் மூலம் சான்றிதழ் பெற்றது தெரியவந்தது.

மேலும், திருச்சியில் மாதந்தோறும் சித்த மருத்துவ கூட்டம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அப்போது கன்னியாகுமரியைச் சேர்ந்த கவுதமன் என்ற ஒஸ்தின் ராஜா என்பவர், சுப்பையா பாண்டியனைச் சந்தித்து தான் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ் தருவதாக கூறியுள்ளார். இதற்காக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பெற்றுள்ளார். இதேபோல், தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலிச் சான்றிதழ்களை விநியோகம் செய்துள்ள நிலையில், ஒஸ்த்தின் ராஜாவையும் போலீசார் தேடி வருகின்றனர்.

publive-image

டாக்டர் சுப்பையா பாண்டியன் பின்னணி:- டாக்டர் சுப்பையா பாண்டியன்-தமிழரசி தம்பதியினர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர்கள், திருச்சிக்கு சித்த மருத்துவர்களாக வருகின்றனர். திருச்சி அண்ணாமலை நகரில் வாடகைக்கு இடம் பிடித்து அங்கு கார்த்திக் சித்த மருத்துவச்சாலை என்ற பெயரில் ஒரு க்ளினீக் துவக்குகின்றனர். திருச்சிக்கு வந்தவர்கள் அதிமுகவில் ஐக்கியமாகின்றனர். சுப்பையா பாண்டியன் முக்குலத்தோர் அமைப்பினை நடத்தி வந்தார்.

பின்னர் பத்திரிகையாளராகவும் செயல்பட்டு, பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்களில் உறுப்பினராகி அங்கே சித்த மருத்துவ முகாம்களை நடத்தி தமிழகம் முழுவதும் தமது தொடர்பினை விரிவாக்கம் செய்கின்றார். அதிமுகவில் கடந்த 2004-ல் முழுமையாக தங்களை இணைத்துக்கொண்டு, முழு நேர தொண்டராக சுப்பையா பாண்டியன் மனைவி டாக்டர் தமிழரசி சுப்பையா பாண்டியன் செயல்படுகின்றார். அதிமுகவில் திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் அணி தலைவராக பொறுப்பு கொடுக்கப்படுகின்றது.

அப்போதைய அதிமுக மாவட்டச்செயலாளர் பரஞ்சோதி மூலம் மன்னார்குடி குரூப் மகாதேவனிடம் நெருக்கமாகி அதிமுகவில் தங்களை முக்கிய பொறுப்பில் தக்க வைத்துக்கொண்டனர். அதிமுகவில் சித்த மருத்துவ முகாம் நடத்துவது, சித்த மருத்துவர் மாநாடு நடத்துவது என தமிழகம் முழுவதும் தங்களை வளர்த்துக்கொள்கின்றனர். கடந்த 2011-ல் தமிழரசிக்கு கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பித்து அதிமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராகவும் தேர்வாகின்றார்.

அதன் பின்னர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடிக்க சுகாதாரத்துறை தலைவர் பதவி கொடுக்கப்படுகின்றது. இதனால் முழு மூச்சாக அதிமுகவில் அங்கம் வகித்து கட்சிப்பணியினை திறம்பட செய்கின்றனர். பின்னர் சசிகலாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளராக தேர்வு செய்யப்படுகின்றார். மேற்கு தொகுதியில் கே.என்.நேரு போட்டியிடுவதால் அவருக்கு டப் கொடுக்கும் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என முடிவு எடுத்ததால், தமிழரசி சுப்பையா பாண்டியன் கிழக்கு தொகுதிக்கு வேட்பாளராக தேர்வு செய்யப்படுகின்றார்.

publive-image

இந்நிலையில், வேட்பாளர் தேர்வு குறித்து கட்சிக்குள் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. சுப்பையா பாண்டியன்-தமிழரசி சுப்பையா பாண்டியன் ஆகியோர் ஒரு போலி டாக்டர் என புகார்கள் ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்டன. இதுகுறித்து தனி கவனம் செலுத்தி விசாரித்த ஜெயலலிதா புகாரில் உண்மைத்தன்மை இருப்பதை கண்டறிந்து இவர்களை அழைத்து கடிந்துக்கொண்டார். தமிழரசி சுப்பையா பாண்டியன் கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படவிருந்த கடைசி நிமிடத்தில் வேட்பாளர் மாற்றப்படுகிறார்.

இப்படியான சூழலிலும் தனது பின்னணியில் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் அதிமுகவுக்கு உண்மையாக உழைக்கின்றனர். ஜெயலாலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி. பக்கம் செல்கின்றார். டி.டி.வி.பெரிய முக்கியத்துவம் கொடுக்காத நிலையில், அங்கிருந்து மீண்டும் எடப்பாடியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தங்களை காத்துக்கொள்ள, தங்கள் தொழிலை பெருக்கிக்கொள்ளவும், போலிகள் விவகாரம் வெளியே வராமல் இருக்கவும், திமுகவை அரணாக பயன்படுத்த நினைதுள்ளனர் சுப்பையா பாண்டியன் குடும்பத்தினர்.

publive-image

அதன்படி அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டு திமுகவுக்காக, அமைச்சருக்காக நிறைய போஸ்டர் அடிப்பது, பேனர் வைப்பது போன்ற செயல்களை செய்து அமைச்சரின் குட்புக்கில் இடம் பிடிக்கின்றனர். இதனால் சென்னை, திருச்சி என பல்வேறு திமுக முகாம்களில் மருத்துவ முகாம்களை நடத்தினர். அதன் மூலம் சுகாதாரத்துறை அமைச்சரிடம் நெருக்கம் ஏற்பட்டது. இதையெல்லாம் பயன்படுத்திக்கொண்ட சுப்பையா பாண்டியன் தான் ஆளுங்கட்சி பிரமுகர் என்பதை முன்னிலைப்படுத்தி கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட போலி சான்றிதழ்களை அடிக்கும் கும்பலுக்கு முகவராக செயல்பட்டுள்ளார்.

இதன் மூலம் ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ்களை சப்ளை செய்து வந்த நிலையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சான்றிதழ்கள் வாய்க்கால் ஓரம் சிதறிக்கிடந்த சம்பவத்தின் விசாரணையில் தற்போது சிக்கி சிறைக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment