Advertisment

கே.என்.நேரு பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ரூ.57 லட்சம் செலவா? மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர்கள் தர்ணா

அரசு விழாவுக்கு இத்தனை லட்சம் செலவான்னுதான் கேட்டேன். அமைச்சர் கிட்ட என்னைப் பற்றி தவறா கூறியிருக்காங்க - தி.மு.க கவுன்சிலர் முத்துச் செல்வன்

author-image
WebDesk
New Update
Trichy DMK

Trichy

திருச்சி மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

மாநகராட்சி 57-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் முத்துச் செல்வம், பட்ஜெட்டில் வார்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு வளர்ச்சி பணிகள் நடைபெறும் என்று அறிவித்து இருந்தீர்கள்? அது எப்போது நடைபெறும். மேலும், அந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மேயர், திருச்சியில் கவுன்சிலர்களுக்கான அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் 47-வது வார்டு அ.ம.மு.க கவுன்சிலர் செந்தில்நாதன் பேசுகையில், தூய்மை பணியாளர்களுக்கு 525 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இது கண்டனத்திற்குரியது. சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபடுபவர்கள் குடித்துவிட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறியதற்கு நான் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் திருச்சியில் ஒரே ஒரு கல்லூரிக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது ஏற்புடையது அல்ல.
இவ்வாறு ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும் அவர்களுடைய தொகுதிகளுக்கான விவாதங்களை முன்வைத்து பேசினார்.

அப்போது 43-வது பொருள் மீதான விவாதத்தின் போது, தி.மு.க கவுன்சிலர்களான முத்துச் செல்வம், ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். கடந்த மே மாதம் 14-ம் தேதி தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க கூட்ட நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்தது. இந்த விழாவுக்கு தேவையான தற்காலிக விழா பந்தல், மேடை, முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கைகள், பயனாளிகளுக்கான இருக்கைகள், அரசு அலுவலர்களுக்கான இருக்கைகள், மேஜை மற்றும் இதர பணிகள் அமைத்து கொடுத்த வகையில் ரூ.56 லட்சத்து 80 ஆயிரம் செலவினத்திற்கான ஒப்புதல் பெறுவதற்காக மாமன்ற கூட்டத்தில் 43-வது தீர்மானமாக கொண்டு வரப்பட்டது.

செலவுத்தொகை அதிகமாக இருப்பதாக தெரிகிறது. எனவே இந்த பொருள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். அதுவரை தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும், கவுன்சிலர்கள் 2 பேரும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மேயர் அன்பழகன் தீர்மானத்தை ஒத்தி வைக்க மறுத்ததோடு, தீர்மானம் நிறைவேற்றப்படும். உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் என்று கூறினார். இதையடுத்து கவுன்சிலர்கள் 2 பேரும் இருக்கையில் அமர்ந்தனர். பின்னர் கூட்டம் முடிவுற்றபிறகு, கவுன்சிலர்கள் முத்துச்செல்வமும், ராமதாஸும் 43-வது பொருள் குறித்து தீர்மானத்தை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால் மேயர் கூட்டம் முடிந்துவிட்டதாக கூறி தனது அறைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து மற்ற கவுன்சிலர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

ஆனால் 2 கவுன்சிலர்கள் மட்டும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக அ.ம.மு.க. கவுன்சிலர் செந்தில்நாதனும் மாநகராட்சி கூட்ட அரங்கில் அவர்களுடன் அமர்ந்து ஆதரவு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டதால் மாமன்றத்தில் பரபரப்பு நிலவியது. இது குறித்து கவுன்சிலர் செந்தில்நாதன் கூறும்போது, "ஒரு பொருள் மீது கவுன்சிலர்கள் விவாதம் நடத்த வேண்டும் என்று கூறினால் அது குறித்து விவாதம் நடத்துவது தான் சரியானதாக இருக்கும். அதைவிடுத்து தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றக்கூடாது. அப்படியானால் அனைத்து தீர்மானங்களையும் தானாக நிறைவேற்றிவிட்டால் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் நடத்துவதற்கு என்ன அர்த்தம்" என்றார்.

திருச்சி மாநகராட்சி 57-வது வார்டு தி,மு.க உறுப்பினர் முத்துச் செல்வன் கூறுகையில், சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அரசு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி தரப்பிலிருந்து சுமார் ரூ.57 லட்சம் செலவு பண்ணியதா மாமன்றத்தில் தெரிவித்தார்கள். ஒரு அரசு விழா, இந்த விழாவுக்கு மாநகராட்சி இவ்வளவு பெரிய தொகை செலவு செய்ததா சொல்றத ஏத்துக்கமுடியல, அவ்வளவா செலவாயிருக்கும்ன்னு ஒரு சந்தேகத்தில் கேள்வி கேட்டேன். இதற்கு மேயர் சரியாவே பதில் சொல்லல, என்னபத்தி அமைச்சருட்ட தப்பா ஏதோ சொல்லி வைச்சு மந்திரி என்ட்ட பேசவுடாம மேயரு தடுக்கறாரு. என்னப்போய் மகேஷ் ஆளுன்னு சொல்லியும், மகேஷ் தூண்டுதலில்தான் திமுக மேயரிடமே திமுக கவுன்சிலரா இருக்கும் நான் எதிர்த்து கேட்க்கிறேன்னு, தப்பு தப்பா மந்திரிட்ட போட்டு வைக்கிறாங்க. அரசு விழாவுக்கு இத்தன லட்சம் செலவான்னுதான் கேட்டேன். அந்த தீர்மானத்த விவாதிப்போம்ன்னேன், பார்த்தா மந்திரிகிட்ட என்ன தப்பு தப்பா மேயரு போட்டு விடுறதையே செய்திட்டிருக்காருங்க, என்றார் ஆதங்கத்துடன்.

publive-image

இதனிடையே ஆணையர் வைத்திநாதன், நகர பொறியாளர் சிவபாதம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 நாட்களில் செலவு தொகைக்கான விளக்கம் அளிப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

முன்னதாக, இந்த கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தையின் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ஜவகர், காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், மனிதநேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது ஆகியோர் மாநகராட்சியின் அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து கைகளில் மணிப்பூருக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓரிரு நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட கட்சி நிகழ்ச்சியில் கவுன்சிலர் முத்துச்செல்வம் அவரை மேடையில் வரவேற்று முதல்வருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கியதும், கவுன்சிலர்கள் முத்துசெல்வம், ராமதாஸ் ஆகியோர் சிவா எம்.பி. வீடு மற்றும் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக திமுக கட்சி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment